புதன், 30 நவம்பர், 2016

சம்பள நாள் சிரமத்தை குறைக்க வங்கிகளில் கூடுதல் 'கவுன்ட்டர்'

சம்பள நாள் என்பதால், மாத சம்பளம் பெறுவோரின் சிரமத்தை குறைக்க வங்கிகளில் கூடுதல் கவுன்ட்டர்களை திறக்க மத்திய அரசு, வங்கிகளை கேட்டுக் கொண்டுள்ளது. ரூபாய் நோட்டு வாபஸ் பெறப்பட்டதால், மாத சம்பளம் பெறுவோருக்கு நாளை சம்பளம் கைக்கு கிடைப்பதில் சிரமம் ஏற்படலாம் என தகவல் வெளியானது. இதனால் மாத சம்பளம் பெறும் ஊழியர்களும், ஓய்வூதியதாரர்களும் கலக்கம் அடைந்தனர். ஆனால், அது போன்று எந்த சிரமும் ஏற்படாது, வழக்கம் போல் சம்பளம் கிடைக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தரப்பிலும், வங்கிகள் தரப்பிலும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், மாத சம்பளம் கிடைப்பதில் சிரமம் ஏற்படாமல் இருக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. மாத சம்பளம் வழக்கம் போல் வங்கி கணக்கில் செலுத்தப்படும். அதனை ஊழியர்கள் சிரமமின்றி எடுத்துக் கொள்ள வங்கிகளில் கூடுதல் கவுன்ட்டர்கள் திறக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள ரூ.500, 2000 நோட்டுக்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், நாசிக்கில் ரூபாய் நோட்டுக்கள் அச்சடிக்கும் பணி நிறுத்தப்பட்டுள்ளதாகவும் வெளியான தகவல்கள் அனைத்தும் வதந்தி மட்டுமே. இதனால் மாத சம்பளதாரர்கள் அச்சம் கொள்ள தேவையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் போக்குவரத்து ஊழியர்களுக்கு இன்று காலை முதல், நவம்பர் மாத சம்பளத்தில் ரூ.3000 முன்பணமாக வழங்கப்பட்டு வருகிறது. அரசின் இந்த அறிவிப்பால் சுமார் 1.40 லட்சம் பணியாளர்கள் பயன் பெற உள்ளனர்.

புதிய கல்வி கொள்கையில் பள்ளிக்கல்வி

1. எட்டாம் வகுப்பு வரைக்கான, 'வகுப்பு நிறுத்தம்' கொள்கை, இனி, ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே பின்பற்றப்படும். 
2. இளம் வயதிலேயே மாணவர்களின் ஆர்வத்தையும், இயல்திறனையும் கண்டறிய, 'கல்வி விருப்பத் தேர்வுகள்' நடத்தப்படும். கற்றலுக்கு சிறப்புத் தேவை வேண்டியவர்கள், மெதுவாகக் கற்பவர்கள் மற்றும் குறை சாதனையாளர்களை கண்டறிந்து பயிற்சிகள் கொடுத்து, எதிர்காலத்தில் அவர்களை, தொழில் வாய்ப்புகளுக்கு ஏற்றவர்களாக உருவாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும். 
3. அறிவியல், கணிதம், ஆங்கிலம் என, மூன்று பாடங்களுக்கு, தேசிய அளவில் பொதுவான பாடத் திட்டமும்; சமூக அறிவியல் போன்ற இதர பாடங்களுக்கு, தேசிய மற்றும் மாநில அளவிலான, இரு பகுதிகள் இருக்கும் வகையில் பாடத் திட்டங்கள் பின்பற்றப்படும். 

4. பத்தாம் வகுப்பில் கணிதம், அறிவியல் மற்றும் ஆங்கிலத்தில் தேர்வுத் தோல்விகளை குறைக்க, இந்தப் பாடங்களில் உயர் தகுதி நிலை மற்றும் குறைந்த தகுதி நிலை என, இரு தேர்வுகள் நடத்தப்படும்.
 5. பாடநுாலில் உள்ளதை மட்டுமின்றி விரிந்த விழிப்புணர்வு, புரிதல், கற்றதன் முழுமைத் தெளிவு மற்றும் உயர்வகை சிக்கல்களுக்கு விடைதேடும் திறன் போன்றவற்றை கணிப்பிடும் வகையில் தேர்வுமுறைகள் மாற்றப்படும்.
6. அனைத்து விதமான பள்ளிகளிலும், குறைந்தபட்சம் இருக்க வேண்டிய வசதிகளும், மாணவர்கள் பெற வேண்டிய கற்றறி அளவுகளும் உறுதி செய்யப்படும்.
7. போதிய மாணவர்களும், உட்கட்டமைப்பு வசதியும் இல்லாத பள்ளிகள் ஒருங்கிணைக்கப்பட்டு, 'தொகுப்பு பள்ளிகளாக' மாற்றும் பணி மேற்கொள்ளப்படும். 
8. பள்ளிகளின் தரம், தலைமை, நிர்வாகம், ஆசிரியர்- திறன், தன்மதிப்பீடு போன்றவற்றின் அடிப்படையில், நாடு தழுவிய தரவரிசை தயாரிக்கப்படும். 9. ஆங்காங்கு இருக்கும் சூழ்நிலைகள் மற்றும் முறைகளுக்கு ஏற்ப, இப்போதைய கல்வி உரிமைச் சட்ட அணுகுமுறையில் சில மாற்றங்கள் பரிந்துரைக்கப்படும். தேவையெனில், மிகவும் ஒதுக்கப்பட்ட மற்றும் புலம்பெயர்ந்த மற்றும் கடினமான சூழ்நிலைகளில் இருக்கும் குழந்தைகளுக்கென, 'மாற்றுப் பள்ளிகளை' உருவாக்க பரிந்துரைக்கப்படும். மேற்குறித்த கல்வி முறை மாற்றங்களை, 'தகுதி, சமவாய்ப்பு' என்ற அறிவுப் பார்வையில் ஏலாதவை என, ஒதுக்கிவிட முடியாது. ஒவ்வொரு வகுப்பிலும், புரிதலில் உயர், சராசரி, கீழ் என்ற நிலைகளில் மாணவர்கள் இருப்பது தெரிந்த உண்மை. வகுப்பில் உள்ள அனைவரும் தேர்வு பெற வேண்டும் என்பதும், உயர் மதிப்பெண்களுடன் பலர், தங்களின் முழுத்திறமையை வெளிப்படுத்தி, வெற்றி பெற வேண்டும் என்பதும் இயல்பான எதிர்பார்ப்புகளே. பின்தங்கிய மாணவர்களை, தேர்வில் வெற்றி நிலைக்குக் கொண்டு வர, ஆசிரியர்கள் கடினமாக செயல்பட வேண்டும். அதேபோல, உயர்நிலை மாணவர்களின் திறமையை மிளிரச் செய்து, அவர்களை உச்சத்திற்கு கொண்டு செல்ல வேண்டியதும் அவர்களின் கடமையாகும். இந்த இரு முயற்சிகளிலும், ஆசிரியர்கள் ஒரே நேரத்தில் ஈடுபடும் போது, பல நடைமுறை சிக்கல்கள் தோன்றுகின்றன. இந்த சிக்கல்களை தீர்க்க, இதுவரை நாம் எடுத்த எந்த முயற்சியும் வெற்றி தரவில்லை. மாணவர்களின் கற்றறி நிலைக்கு கணிப்பீடு இல்லையெனில், பல தீமைகள் விளையும். ஆனால், கற்றறி தகுதியில், பல காரணங்களால் பின்தங்கியிருக்கும் குழந்தைகளை கணிப்பீடு என்ற பார்வையில், 10ம் வகுப்பை முடிப்பதற்குள், இரண்டு மூன்று ஆண்டு காலத்தை, பயனறச் செய்யும் செயல் எப்படி ஏற்புடைத்ததாகும்? பெற்றோரிடம் உதவி பெற முடியாத, பெரும்பாலான இத்தகைய குழந்தைகளின் நிலை கருதி, எட்டா-ம் வகுப்பு வரை, 'வகுப்பு நிறுத்தம் இல்லை' என்ற கொள்கை, சில ஆண்டுகளாக செயலில் இருப்பதன் பயனாக, எந்த குறிப்பிடத்தக்க நன்மையையும் அவர்கள் பெற்றுவிடவில்லை. ஒவ்வொரு ஆண்டிறுதி தேர்விலும், தோல்வி பெற்றவர்களுக்கு என, எடுக்க வேண்டிய தனி முயற்சிகள் சடங்காகி, அவர்களை தேர்வுக் கோட்டுக்கு ஒவ்வொரு முறையும் துாக்கி விட்டு விடும், உண்மைக்கு சான்றுகள் தேவையில்லை. இப்போது, கல்வியறிவு இருந்தாலும் இல்லையென்றாலும், குழந்தைகளைப் பள்ளி நேரத்துக்கு முன்னும் பின்னும், தனிப்பயிற்சிக்கு அனுப்புவதே சிறந்த வழி என, பெற்றோர் நம்பத் தொடங்கி விட்டனர். பள்ளியில் ஒருவகை பயிற்சி, வீட்டுவேலை, தேர்வுகள், தனிப்பயிற்சியில் வேறொருவகை பயிற்சி, வீட்டுப்பாடம், தொடர் தேர்வுகள் - என, குழந்தைகள் தவிக்கின்றனர். வகுப்பு நிறுத்தம் எந்த வகுப்பில் இருந்தாலும் முடிவு ஒன்றே. இளமையில், இரண்டு மூன்று ஆண்டுகளை விரக்தியில் வீணடிப்பர். 10ம் வகுப்புத் தேர்வை எழுதப்போகும் எந்த மாணவனும், தன் படிப்பு காலத்தில் இந்த இழப்பைச் சந்திக்கக் கூடாது. இந்த நோக்கில், வகுப்பு நிறுத்தம் இல்லாமல் கற்பிக்கும் முறையை, நாம் செம்மைப்படுத்தியாக வேண்டும். தேர்வு மதிப்பீட்டின் நோக்கமும், தொடர்ந்து பின்தங்கும் மாணவர்களுக்கான சிறப்புப் பயிற்சிகளை, எப்படிக் கொடுப்பது என்பதை நோக்கியே இருக்க வேண்டும். 'கல்வி விருப் பத் தேர்வுகள்' இளம் வயதில், தீமையையே விளைவிக்கும். மாணவர்களுக்கு ஒரு பாடத்தில் விருப்பமில்லாமல் போவதற்கு, அதுவரை அந்தப் பாடத்தைக் கற்பித்த ஆசிரியரே பெரும் காரணம்; அடுத்து வரும் வகுப்புகளில் அவர்கள் விருப்பம் மாறும். மேலும், இளம்வயதில் மாணவர்கள் ஒரே பாடத்தில் சிறந்து விளங்குவதை விட, ஒன்றுக்கு மேற்பட்ட பாடங்களின் அறிவை, -குறிப்பிட்ட அளவுக்கு பெற்றிருப்பதே அவர்களின் எதிர்காலத்துக்கு உதவியாயிருக்கும். பத்தாம் வகுப்பில் குறிப்பிட்ட பாடங்களுக்கு, இரண்டு தகுதிநிலைத் தேர்வுகள் வைக்கும் முறை தோல்வியையே காணும். தொழிற்கல்விக்கு என, மாணவர்களை நாம் துரத்தக் கூடாது. இந்த முயற்சியில் நாம் முன்னமே தோற்றுள்ளோம். எம்.பில்., வகுப்பில் இப்படித் தான், 'முதல் வகுப்பில் தேர்ச்சி பெறுவோர் மட்டுமே, பிஎச்.டி., ஆய்வில் சேரலாம்' என்ற முறை தோல்வியைச் தழுவியிருக்கிறது. அறிவியல், கணிதம், ஆங்கிலம் மூன்றுக்கும், நாடு தழுவிய பாடத்திட்டம் என்ற கொள்கையும், தேர்வு முறையில் மாற்றம் கொண்டு வரும் கொள்கையும் நன்மை தரும்.நாடு தழுவிய அளவில், பள்ளிகளின் தரவரிசை காண்பதும், ஒவ்வொரு நிலையிலும் வெளிவரும் மாணவர்களின் கற்றறி நிலைகளை ஒப்பீட்டில் அறிவதும் வரவேற்கத்தக்க முயற்சிகளே. 'எழுபது, 80 சதவீத பள்ளிகள் தரம் தாழ்ந்தவை' என, முத்திரை குத்திவிட்டால் மட்டும் போதாது. அவற்றை உயர்த்துவதற்கு என்ன உதவியைச் செய்யப் போகிறோம்? அப்படி ஏதாவது செய்திருந்தால், 80 ஆயிரத்துக்கும் மேலான அரசு பள்ளிகளை, சமீப நாட்களில் மூடும் நிலை வந்திருக்காது. ஐந்து ஆண்டுகளை (2010 - -15) கடந்திருக்கும், கல்வி உரிமைச் சட்டம், குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெறவில்லை. நாட்டில், 8.3 சதவீத பள்ளிகள் மட்டுமே இச்சட்டம் முன்வைத்த, 10 எதிர்பார்ப்புகளுக்குள் இருப்பதும், 80 ஆயிரத்து, 647 மத்திய, -மாநில அரசு பள்ளிகள் மூடப்பட்டதும், 21 ஆயிரத்து, 351 தனியார் பள்ளிகள் அங்கீகாரமில்லாமல் இயங்குவதும் தெரிய வந்துள்ளது. உண்மையில், கல்வி உரிமைச் சட்டத்தின் தோல்வியை மூடி மறைக்கும் முயற்சியையும், அதன் மீது அக்கறை கொள்ளாத போக்கையுமே புதிய கல்விக்கொள்கை வடிவம் நமக்குக் காட்டுகிறது. கருத்துக்கேட்கும் நிலையிலேயே எதிர்ப்புகளாலும், இப்போது எல்லா நிலைகளிலும் புதிய கொள்கை நீர்த்துக் கொண்டிருப்பதில் வியப்பேதுமில்லை.தமிழகத்தில் வரும் கல்வியாண்டிலிருந்து, பிளஸ் 1, பிளஸ் 2க்குப் புதிய பாடத்திட்டம் தாயார் நிலையில் இருப்பதாகச் செய்தி வந்துள்ளது; 'மாற்றங்கள் இருக்கும், ஆனால் பெரிய அளவில் இருக்காது' என்ற செய்தியும் வருகிறது. அது உண்மையானால், நம் மாணவர்கள், தேசிய அளவில் மீண்டும் தோல்வியை சந்திக்க நேரிடும்.அதைத் தவிர்க்க, தேசிய மற்றும் உலக அளவிலான போட்டித் தேர்வுகளுக்கு உதவும் வகையில் அறிவியல், கணிதம் மற்றும் ஆங்கிலப் பாடங்களுக்கு, தேசிய அளவில் தேர்ந்தெடுக்கப்பட்ட வல்லுனர்கள் தயாரிக்கும் பாடத்திட்டத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும் அல்லது அதற்கும் மேலான பாடத்திட்டத்தை தயாரிக்க வேண்டும்.
திடீரென அதைச் செய்ய முடியாதெனில், எப்போதைக்கு தயாராகும் என்பதை தெளிவுபடுத்த வேண்டும். இதன் மூலம் போட்டிகளில் பின்னுக்கு ஓடுபவர்களாக, நம் குழந்தைகள் இருப்பதை தவிக்க முடியும்.

ஆதார் எண்ணை இணைக்காதவர்கள் இன்று விவரம் சேகரிக்கிறது அதிகாரிகள் குழு

வேலூர் மாவட்டத்தில், குடும்ப அட்டைகளில் இதுவரை 64 சதவீதம் பேர் ஆதார் அட்டை எண்ணை இணைத்துள்ளனர். எஞ்சிய அட்டைதாரர்களை இணைப்பதற்காக அதிகாரிகள் தலைமையில் அமைக்கப்பட்ட குழு வீடுவீடாக ஆய்வு செய்யும் பணியை புதன்கிழமை தொடங்குகிறது.


 சுமார் 10.5 லட்சம் குடும்ப அட்டைதாரர்கள் கொண்ட வேலூர் மாவட்டத்தில், அரக்கோணம் வட்டத்தில் 151 கடைகள், நெமிலியில் 115 கடைகள், வாலாஜாவில் 186, ஆற்காட்டில் 159, காட்பாடியில் 184, வேலூரில் 164, அணைக்கட்டில் 105, குடியாத்தத்தில் 114, பேர்ணாம்பட்டில் 96, ஆம்பூரில் 143, வாணியம்பாடியில் 123, நாட்டறம்பள்ளியில் 85, திருப்பத்தூரில் 190 கடைகள் என 1,815 நியாய விலைக் கடைகளில் செயலி முறை பயன்படுத்தப்படுகிறது. இந்தக் கடைகளில் பணிபுரியும் விற்பனையாளர்களுக்கு செயலியை இயக்க மாவட்டத்தில் 8 மையங்களில் செயல்முறை பயிற்சி அளிக்கப்
பட்டுள்ளது.
 நியாய விலைக் கடைகளில் பயன்படுத்தப்படும் செயலியில் குடும்ப அட்டையில் உள்ள 5 வயதுக்கு மேற்பட்ட அனைத்து உறுப்பினர்களின் பெயர், ஆதார் எண், செல்லிடப்பேசி போன்ற தகவல்கள் பதிவு செய்யப்படுவதுடன், பொருள்கள் வாங்கிய விவரம், குடும்பத் தலைவரின் செல்லிடப்பேசிக்கு குறுஞ்செய்தியாக அனுப்பப்படுகிறது.
 இந்தத் திட்டத்தில் மாவட்டம் முழுவதிலும் இதுவரையில் 64 சதவீத அட்டைதாரர்கள் தங்களது ஆதார் எண், செல்லிடப்பேசி விவரங்களை நியாய விலைக் கடைகளில் பதிவு செய்துள்ளனர்.
 ஆதார் அட்டை எடுக்கத் தவறியவர்களுக்கு அட்டை எடுக்கும் பணி அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களில் தீவிரமாக நடந்து வருகிறது.
இதற்கிடையில், நியாய விலைக் கடைகளில் ஆதார் அட்டை இணைப்பதற்காக அண்மையில் நடத்தப்பட்ட சிறப்பு முகாமில் சுமார் 50,000 பேர் இணைந்துள்ளனர்.
 மாவட்டம் முழுவதிலும் உள்ள 13 வட்டங்களில் துணை ஆட்சியர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள மண்டலக் குழுவானது, வீடு வீடாகச் சென்று ஆய்வு செய்து, ஆதார் அட்டையை நியாய விலைக் கடைகளில் இணைக்கும் முயற்சி எடுக்கவுள்ளது.  
இதுகுறித்து பொதுவிநியோகத் திட்ட அதிகாரி ஒருவர் கூறியதாவது:  ஸ்மார்ட் கார்டு வழங்கும் திட்டம், போலி கார்டுகளை முற்றிலும் ஒழிக்கும் நோக்கில் நியாய விலைக் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களின் ஆதார் எண், செல்லிடப்பேசி விவரம் இணைக்கும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
 நியாய விலைக் கடைகளில் ஆதார் அட்டை இணைக்காத உறுப்பினர்களை இணைப்பதற்காக வீடு வீடாகச் சென்று ஆய்வு செய்யும் பணி புதன்கிழமை முதல் தொடங்கி சில நாள்களில் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
 நியாய விலைக் கடையில் குடும்ப அட்டையில் பெயர் உள்ள உறுப்பினரின் ஆதார் அட்டை இணைக்க முடியாதவர்களின் பெயரை நீக்கம் செய்வதோ, பொருள்கள் வழங்குவதோ நிறுத்தப்பட மாட்டாது என்றார்.

காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக உருவானது: தமிழ்நாடு வெதர்மேன்

வட இந்திய சமுத்திர படுகையில் ஒரு புயல் உருவாகியுள்ளது. அதற்கு 'நாடா' எனப் பெயரிடப்பட்டுள்ளது (ஓமன் நாடு இந்தப் பெயரை வழங்கியுள்ளது). காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் மேலும் வலுப்பெற்றதை அடுத்து இந்திய வானிலை மையம் அதைப் புயலாக அறிவித்திருக்கிறது.
ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலத்துக்கும் புயலுக்கும் இடையே மிகப் பெரிய வித்தியாசம் இல்லை என்றே கூறலாம். தற்போது வங்கக்கடலில் உருவாகியுள்ள 'நாடா' புயல் தமிழகத்தில் டிசம்பர் 2-ம் தேதியன்று நாகப்பட்டினம் - புதுச்சேரி இடையே கரையைக் கடக்கும்.
புயல் மிக வலுவாக இருப்பதாலும், அது அதன் திசையில் நேர்த்தியாக நகர்ந்து வருவதாலும் 'நாடா' திசை மாற வாய்ப்பில்லை. அதேவேளையில், காற்று வகைக்கெழு காரணமாக புயல் கரையை நெருங்கும்போது வலுவிழக்க வாய்ப்புள்ளது.
டிசம்பர் 1-ம் தேதி புதுக்கோட்டை, திருவள்ளூர் மாவட்டங்களில், கடலோரப் பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பிருக்கிறது. டெல்டா மாவட்டங்களிலும், காவிரி நீர்பிடிப்பு பகுதிகளிலும் நல்ல மழைக்கு வாய்ப்பிருக்கிறது.
சென்னையில் டிசம்பர் 1 மற்றும் 2-ம் தேதி காலையில் நல்ல மழை பெய்யும். அதற்கு அடுத்த இரண்டு நாட்களுக்கு ஆங்காங்கே மிதமான அளவில் மழை பெய்யும்.
டிசம்பர் 2, 3, 4 தேதிகளில்- நீலகிரி, கோயமுத்தூர் மாவட்டங்களில் கனமழை பெய்யும். குறிப்பாக குன்னூர் பகுதியில் கனமழை பெய்யும். தென்கோடி தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பில்லை. ஆங்காங்கே குறைந்த அளவில் மழை பெய்யலாம்.மீனவர்கள் அடுத்த இரண்டு நாட்களுக்கு கடலுக்குச் செல்லாமல் இருப்பதே நல்லது.
டிசம்பர் 1-ம் தேதி இரவு மற்றும் டிசம்பர் 2-ம் தேதி காலையில் தமிழக கடலோரப் பகுதிகளில் மணிக்கு 60-ல் இருந்து 70 கி.மீ வேகத்துடன் பலத்த காற்று வீச வாய்ப்புள்ளது.
'தமிழ்நாடு வெதர்மேன்' பிரதீப் ஜான்

சென்னை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு 2 நாட்கள் விடுமுறை: தமிழக அரசு

'நாடா' புயல் எச்சரிக்கையை அடுத்து சென்னை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு இரண்டு நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், நாகை, கடலூர் பள்ளிகளுக்கு டிசம்பர் 1 மற்றும் டிசம்பர் 2 ஆகிய இரு நாட்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் வானூர், மரக்காணம் ஆகிய இரு வட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறை இந்த விடுமுறையை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
'நாடா' புயல்
வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேலும் வலுப்பெற்று புயலாக உருவானதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்தப் புயலுக்கு 'நாடா' எனப் பெயரிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.பாலச்சந்திரன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறும்போது, "வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது இன்று (புதன்கிழமை) காலை 8.30 மணிக்கு மேலும் வலுப்பெற்று புயலாக உருவானது. இந்தப் புயலுக்கு 'நாடா' எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
தற்போதைய நிலவரப்படி 'நாடா' புயல் புதுச்சேரிக்கு தென் கிழக்கே 830 கி.மீ. தொலைவில் நிலை கொண்டுள்ளது. இது மேலும் வலுப்பெற்று வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து நாளை மறுநாள் டிசம்பர் 2-ம் தேதியன்று வேதாரண்யம் - புதுச்சேரிக்கு இடையே கடலூர் அருகே கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது" என்றார்.
சென்னையில் நாளை முதல் மழை
அவர் மேலும் கூறும்போது, 'நாடா' புயல் காரணமாக சென்னையில் நாளை அதிகாலை முதல் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பிருக்கிறது. மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.
இந்நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் உள்ள அனைத்துப் பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

செவ்வாய், 29 நவம்பர், 2016

வங்கிகளில் தேவையான பணம் எடுக்கலாம்: ரிசர்வ் வங்கியின் புது அறிவிப்பு

வாடிக்கையாளர்கள் இன்று முதல் வங்கிகளில் தேவையான பணம் எடுத்துக்கொள்ளலாம் என ரிசர்வ் வங்கி அடுத்த அறிவிப்பை வெளியிடப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 
நாட்டில் பதுக்கப்பட்டுள்ள கருப்புப் பணத்தை வெளிக்கொணரும் முயற்சியாக, புழக்கத்திலிருந்த ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகள் செல்லாது என பிரதமர் நரேந்திர மோடி கடந்த 8-ஆம் தேதி இரவு அறிவித்தார்.  செல்லாத நோட்டுகளை பொதுமக்கள் அடுத்த மாதம் 30-ஆம் தேதி வரை தங்களது வங்கிக் கணக்குகளில் செலுத்திக் கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டது. அதையடுத்து பொதுமக்கள் அனைவரும் தங்களிடமிருந்த செல்லாத 500, 1000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் செலுத்தி வருகின்றனர்.

 இந்த நிலையில், ரூ.500, ரூ.1000 நோட்டுகளாகக் கருப்புப் பணத்தை வைத்திருப்பவர்கள் சட்ட விரோதமான முறையில் பிறரது வங்கிக் கணக்குகள் வாயிலாக அந்தப் பணத்தை வங்கிகளில் செலுத்தி வருவதாக புகார்கள் எழுந்துள்ளன. இதையடுத்து வாடிக்கையாளர்கள் வங்கியில் அதிக அளவில் பணபரிவர்த்தனை செய்து விடக்கூடாது என்பதற்காக, நாடு முழுவதும் வங்கிகளில் பணம் எடுப்பதற்கு பல்வேறு கட்டுபாடுகள் விதிக்கப்பட்டது. இதன்காரணமாக அத்தியவாசிய தேவைக்கு வங்கியில் பணம் எடுப்பதற்கு நடுத்தர மக்களுக்கு மிகவும் சிரமம் ஏற்பட்டது. மேலும், மக்கள் தங்களிடம் உள்ள ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் டெபாசிட் செய்யவும் தயங்கிவருகின்றனர். இதை கருத்தில் கொண்டு, ரிசர்வ் வங்கி புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அந்த அறிவிப்பில் இன்று முதல் வங்கிகளில் பணம் எடுப்பதற்காக விதிக்கப்பட்டுள்ள விதிமுறைகள் தளர்த்தபடும். இதுவரை நடைமுறையிலுள்ள வரம்பிற்கு கூடுதலாக வாடிக்கையாளர்களின் தேவைக்கேற்ப பணம் எடுத்து கொள்ளுவதற்கான அதிகாரப்பூர்வ உத்தரவை ரிசர்வ் வங்கி இன்று வெளியிடும் என தகவல்கள் வெளியாகி உள்ளது. இதையடுத்து, வங்கிகளில் உயர் மதிப்புடைய 500, 2000 ரூபாய் நோட்டுகளை வங்கியில் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விதிகள் தளர்வு குறித்த விரிவான தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

திங்கள், 28 நவம்பர், 2016

இந்து திருமுருகன் நடுநிலைப்பள்ளி , புதுப்பட்டி அறிவியல் கண் காட்சி

பாப்பாக்குடி சரக தொடக்க மற்றும் உயர்தொடக்க குருவள  மைய அளவில் நடைபெற்ற  அறிவியல் கண்  காட்சியில் வெற்றி பெற்ற   புதுப்பட்டி இந்து திருமுருகன் நடுநிலைப்பள்ளி   மாணாக்கர்களுக்கு  பள்ளியின் செயலர் அவர்களு ம் , தலைமை ஆசிரியர் திரு. பாஸ்கர் அவர்களும்  பரிசுகள் வழங்கி பாராட்டினார்கள்.

BRC LEVEL TRAINING FOR PRIMARY & UPPER PRIMARY TEACHERS



Primary 2 days
Developing basic skills in teaching of tamil
Batch 1 - 12.12.16 / 13.12.16
Batch 2 - 14.12.16 / 15.12.16


Upper Primary 3 days
Teaching of Maths using SLM Kitbox
09.01.2017
10.01.2017
11.01.2017

ஏழை, எளிய மக்களின் வங்கிக் கணக்கில் பணத்தை, 'டிபாசிட்' செய்து, அவர்களது வாழ்க் கையில் விளையாட வேண்டாம்,'' என, எச்சரித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி

றுப்புப் பணத்தை வெள்ளையாக்க, ஏழை, எளிய மக்களின் வங்கிக் கணக்கில்
பணத்தை, 'டிபாசிட்' செய்து, அவர்களது வாழ்க் கையில் விளையாட வேண்டாம்,'' என,
எச்சரித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, பண மில்லா பரிவர்த்தனைக்கு மாறும்படி, வணிகர் கள் உள்ளிட்டோருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
செல்லாத ரூபாய் நோட்டு திட்டம் அறிவிக்கப் பட்டது, நாடு முழுவதும் பெரும் பரபரப்பை யும், சலசலப்பையும் ஏற்படுத்தி உள்ள நிலை யில், பிரதமர் நரேந்திர மோடியின், 'மன் கி பாத்' என்ற ரேடியோ உரை, நேற்று ஒலிபரப்பானது; அதில் அவர் கூறியதாவது:

கறுப்புப் பணத்தை ஒழிப்பதற்காக, செல்லாத ரூபாய் நோட்டுகள் குறித்த அறிவிப்பு வெளி யிடப்பட்டது; இதற்கு, மக்கள் அமோக ஆதரவு அளித்து வருகின்றனர்.

கறுப்புப் பணத்தை வைத்துள்ளவர்கள், அவற்றை வெள்ளையாக்க பல்வேறு முயற்சி களை மேற்கொண்டு வருகின் றனர்;இதற்காக ஏழை,எளிய மக்களை ஏமாற்றி, அவர்களது வங்கி கணக்கில் பணத்தை செலுத்தி, அவர்க ளது வாழ்க்கையுடன் விளையாடுகின்றனர்.

தப்பிக்க முடியாது

நீங்கள் சட்டத்தை மதிக்கவில்லை என்றாலும்,சட்டம் அதன் கடமையை செய்யும். மிகவும் கடுமையான பினாமி பரிவர்த்தனை சட்டம் நடைமுறையில் உள்ளது; இந்த சட்டத்தில் இருந்து எவரும் தப்பிக்க முடியாது. 

மற்றவர்களின் வங்கி கணக்கில் பணம் செலுத் துவதை நிறுத்த வேண்டும்;இல்லை யென்றால் கடும் நடவடிக்கைக்கு ஆளாக நேரிடும். சட் டத்தை எப்படியும் வளைத்து விடலாம் என, நீங்கள் மனக்கணக்கு போடலாம்; ஆனால் இனி, அதன் வலிமையை சந்திக்க நேரிடும் என எச்சரிக்கிறேன்.

ஏமாற்று வித்தை

இந்தப் பிரச்னையில், ஏழை, எளிய, அப்பாவி மக்கள் சிக்காமல் காக்க வேண்டும்; இதற்கு உத விட, படித்த இளைஞர்கள் முன்வர வேண்டும். உங்களுக்கு தெரிந்தவர்களுக்கும், வணிகர் களுக்கும் டிஜிட்டல் பரிவர்த்தனை குறித்தும், கறுப்புப் பண முதலைகளின் ஏமாற்று வித்தை கள் குறித்தும் விளக்குங்கள்.

ரொக்கப் பரிவர்த் தனை இல்லாத சமூகத்தை உருவாக்குவது, மிகவும் சுலபமல்ல;அதே நேரத்தில், குறைந்த ரொக்க பரிவர்த்தனைக்கு உடனடியாக மாற லாம். இதன் மூலம் மிக விரைவில், ரொக்க பண பரிவர்த்தனை இல் லாத நிலையை எட்ட முடியும்.

விவசாயிகள், தேயிலை தோட்டத் தொழி லாளர்கள் போன்றவர்களுக்கு கொடுக்கும் ஊதியம் ஒன்று; ஆனால் கணக்கு காட்டுவது வேறு. டிஜிட்டல் மயமாகும் போது, அவர்களது ஊதி யம் வங்கிக் கணக்கில் சேர்க்கப்பட்டால்இவ்வாறு ஏமாற்றப்படுவது தடுக்கப்படும்.

அதேபோல், தங்கள் தொழிலை வளர்த்து கொள் வதற்கு, வணிகர்களுக்கு மிகப்பெரிய வாய்ப் பாக இது உள்ளது. அதனால், ரொக்க பரிவர்த் தனையில் இருந்து டிஜிட்டல் பரிவர்த்தனை க்கு அனைவரும் மாற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

'செல்பி'யை விட சுலபம்!

உத்தர பிரதேச மாநிலத்தில் நேற்று நடந்த, பா.ஜ.,மாநாட்டில்,மோடி பேசியதாவது: கறுப்பு பணம், ஊழலை ஒழிக்க உதவுங்கள் என, நான் அழைப்பு விடுத்துள்ளேன்; ஆனால், சிலர் இதை எதிர்த்து, 'பந்த்' நடத்துவதற்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

கறுப்புப் பணம் ஒழிக்கப்பட வேண்டுமா, பந்த் நடக்க வேண்டுமா என்பதை மக்களே முடிவு செய்யட்டும். செல்லாத ரூபாய் நோட்டுகள் பிரச்னையை சமாளிக்க, டிஜிட்டல் பரிவர்த்த னை முறைக்கு மக்கள் மாற வேண்டும்.

நீங்கள், 'செல்பி' எடுத்து, மற்றவர்களுக்கு அனுப் புவதை விட மிகவும் சுலபமானது, உங்கள் கையில் உள்ள மொபைல் போனி லிருந்து பரிவர்த்தனை செய்வது; மிகவும் பாதுகாப்பானதும் கூட.இவ்வாறு அவர் பேசினார்.

பணமில்லா முதல் இந்திய மாநிலமாகிறது கோவா!!!

டிசம்பர் 31 ம் தேதி முதல், இந்தியாவில் பணமில்லா முதல் மாநிலமாக கோவா மாற உள்ளது. டிசம்பர் 31 ம் தேதியிலிருந்து கோவா மக்கள் அனைவரும் காய்கறி, மீன், இறைச்சி உள்ளிட்ட அன்றாட தேவைக்கான அனைத்து பொருட்களையும் தங்களின் மொபைல் போனை பயன்படுத்தியே வாங்க உள்ளனர்.

பணமில்லா கோவா :

கோவா மக்கள் இனி பொருட்கள் வாங்க புறப்படும் போது பணம் வைக்கும் பர்ஸ் எடுத்துச் செல்ல வேண்டிய அவசியம்இல்லை. இதனால் பிக்பாக்கெட் பயமும் இல்லாமல் போக உள்ளது. மொபைல் மூலமே பணபரிமாற்றம் அனைத்தும் செய்யப்பட உள்ளது. மொபைல் போனை பயன்படுத்தி ஒருவர் வாங்கும் பொருளுக்கான பணம், அவரது வங்கிக் கணக்கில் இருந்து எடுத்துக் கொள்ளப்படும் என கோவா தலைமை செயலாளர் ஆர்.கே.ஸ்ரீவட்சவா தெரிவித்துள்ளார்.

மொபைலில் வியாபாரம் :

ஏடிஎம்., மற்றும் கிரெட் கார்டுகளை பயன்படுத்தி பணம் எடுக்கும், பொருட்களும் வாங்கும் முறையும் நடைமுறையில் இருக்கும். அதேசமயம் ஒருவரிடம் ஸ்மார்ட்போன் இல்லை என்றாலும், சாதாரண மொபைல் போனில்* 99# என்ற எண்ணிற்கு டயல் செய்தால் பணம் பரிமாற்றம் ஆகி விடும். சிறு வியாபாரிகளும், தங்களிடம் ஸ்வைப்மிஷின் இல்லை என்றாலும் இந்த முறையில், தாங்கள்விற்கும் பொருளுக்கான பணம் அவரின் வங்கிக்கணக்கிற்குவந்து விடும்.மக்களிடம் விழிப்புணர்வு :பணமில்லா பணபரிவர்த்தனை செய்வது எப்படி என்பது குறித்த விழிப்புணர்வு சிறு வியாபாரிகள், கடைக்காரர்கள், பொதுமக்கள் ஆகியோரிடம் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அதே சமயம் நேரடியாக பணம் கொடுத்து வியாபாரம் செய்யும் நடைமுறையும் வழக்கத்தில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பணமில்லா பணவர்த்தனைக்கு எந்த கட்டுப்பாடும்இல்லை எனவும், மொபைல் மூலம் நடக்கும் பணபரிவர்த்தனைக்கு எந்த கட்டணமும் வசூலிக்கப்படாது எனவும் கோவா முதல்வர் லட்சுமிகாந்த் பர்சேகர் தெரிவித்துள்ளார்.

பிரதமரின் கனவுக்கு துணை நிற்போம் :

இதுதொடர்பாக நடந்த ஆலோசனை கூட்டத்தில் பேசிய மத்திய அமைச்சர் மனோகர் பாரிக்கர், இந்தியாவை முற்றிலுமாக பணமில்லா நாடாக மாற்றுவது பிரதமர் மோடியின் கனவு. இதில் முன்னோடியாக கோவா திகழ உள்ளது. நாம் பிரதமரின் கனவுக்கு துணைநின்று, ஆதரவு அளிக்க வேண்டும் என்றார். இம்முறையின்படி ஒருவர் தனது மொபைலையே வங்கியாக பயன்படுத்தலாம். ஒருவர் தனது மொபைல் போன் எண்ணை மத்திய அரசின் கீழ் உள்ள வங்கி ஒன்றில் பதிவு செய்து விட்டால், அனைத்து விதமான பணபரிமாற்றத்தையும் அதனை பயன்படுத்தி செய்யலாம்.

தேசிய அளவிலான அறிவியல் கண்காட்சி இறுதிப் போட்டி, டிச., 13 முதல், 19 வரை, பெங்களூரில் நடக்கிறது.

தேசிய அளவிலான அறிவியல் கண்காட்சியில் பங்கேற்க, தமிழகத்தில் இருந்து, எந்த ஒரு அரசு பள்ளியும் தேர்வாகவில்லை.மத்திய அரசின், தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம், தேசிய அளவிலான அறிவியல் கண்காட்சியை, ஒவ்வொரு ஆண்டும் நடத்தி வருகிறது. 
இந்த ஆண்டுக்கான கண்காட்சி, மாவட்ட மற்றும் மாநிலங்கள் அளவில் நடத்தி முடிக்கப்பட்டு உள்ளது. தேசிய அளவிலான கண்காட்சி மற்றும் இறுதிப் போட்டி, டிச., 13 முதல், 19 வரை, பெங்களூரில் நடக்கிறது.இதில், பல மாநிலங்களின், 209 படைப்புகள் இடம் பெற உள்ளன. தென் மாநிலங்களில், கர்நாடகாவில் ஒன்பது; கேரளாவில் ஒன்று; ஆந்திராவின் நான்கு அரசு பள்ளிகள், தேசிய போட்டியில் பங்கேற்கின்றன.புதுச்சேரி சார்பில், மாகியில் உள்ள, ஜவஹர்லால் நேரு அரசு பள்ளி பங்கேற்கிறது. தமிழகத்தில், இரு தனியார் பள்ளிகள் மட்டுமே தேர்வாகியுள்ளன; அரசு பள்ளி எதுவும்தேர்வாகவில்லை. இது, அரசு பள்ளி மாணவர்களையும், கல்வியாளர்களையும் கவலை அடையச் செய்துள்ளது.

'நூலகத்தை தூசி தட்டி வையுங்க...!' பள்ளிகளுக்கு இயக்குனர் உத்தரவு

அரசு பள்ளிகளில் ஆய்வகம் மற்றும் நுாலகத்தை துாசி தட்டி சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்றும், மாணவர்களுக்கு சுகாதாரம் குறித்து வகுப்புகள் நடத்த வேண்டும்' என்றும், பள்ளிக்கல்வி இயக்குனர் உத்தரவிட்டு உள்ளார்.அரசு பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, பள்ளிக்கல்வி இயக்குனர் எஸ்.கண்ணப்பன் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

●மாணவர்களுக்கு சுகாதார விழிப்புணர்வு ஏற்படுத்த, வழிபாட்டு கூட்டத்தில் அவர்களை பேச வைக்க வேண்டும். பேச்சு, கட்டுரை, ஓவிய போட்டிகள் நடத்த வேண்டும்

 ●திறந்தவெளியில் மலம் கழிப்பதால் நோய் பரவும் என்பதை, கிராமப்புற மாணவர்கள் மூலம் அவர்களின் பெற்றோருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அத்துடன், கழிப்பறைக்கு செல்லும் போது காலணி அணியும் படியும், சோப்பு பயன்படுத்தி கை கழுவும்படியும் அறிவுறுத்த வேண்டும்

●பள்ளி வளாகத்தில் குப்பை, தேவையற்ற பொருட்கள் குவியாமல் பார்த்து கொள்ள வேண்டும். குடிநீர் தொட்டியை அடிக்கடி சுத்தம் செய்து, மாணவர்களுக்கு துாய குடிநீரை வழங்க வேண்டும்

●நுாலகம், ஆய்வகம், வகுப்பறை, கணினிகள், ஆவணங்கள், மாணவர்கள் அமரும் பெஞ்ச் போன்றவற்றில் துாசி படியாமல், சுத்தமாக பராமரிப்பது அவசியம்.

உலகத் தரத்துக்கு உயர்த்த பள்ளிகள் தர மதிப்பீடுத் திட்டம்

உலக தரத்துக்கு இந்திய பள்ளிகளின் தரத்தை உயர்த்த பள்ளித் தரங்கள் மற்றும் மதிப்பீடு திட்டம் உருவாக்கப்பட்டு, அதுகுறித்து பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளிக்கப்படுகிறது.மேம்படுத்தப்பட்ட செயல் திட்டங்கள் மூலம் அறிவார்ந்தகுழந்தைகளை உருவாக்குவது அனைத்துப் பள்ளிகளின் முக்கியக் கடமையாகும். செயல் திட்டங்கள் சிறப்பாக அமல்படுத்தப்பட வேண்டுமானால் பள்ளிகளில் கட்டமைப்பு வசதி, மனிதவளம், கற்றல், கற்பித்தல் முறை, சமூகத்துடன் இணைந்து செயல்படும் நடைமுறை போன்றவை நன்முறையில் பேணுதல் அவசியம்.
பள்ளிக்கு அரசு வழங்கும் சலுகைகள், திட்டங்களை நடைமுறைப்படுத்துவதுடன் அனைத்துப் பள்ளிகளும் தாமாகவே பள்ளிச் சூழலுக்கு ஏற்ப செயல்களை திட்டமிட்டு தகுந்த மனித வளத்துடன் நடைமுறைப்படுத்துவது மிகுந்த பலனைத் தரும். அந்த வகையில் ஒவ்வொரு பள்ளியும் தமது முன்னேற்றத்தை அவ்வப்போது சுய பரிசோதனை செய்து கொள்வது அவசியமாகும்.அதற்காக மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் வழிகாட்டுதலின்பேரில், தேசியக் கல்வி திட்டமிடல் மற்றும் நிர்வாகப் பல்கலைக்கழகம், இந்தியாவில் உள்ள பள்ளிகளின் தரத்தை உலக தரத்துக்கு உயர்த்தும் நோக்கில் பள்ளித் தரங்கள் மற்றும் மதிப்பீட்டுத் திட்டத்தை உருவாக்கியுள்ளது.தேசிய கல்வி திட்டமிடல் மற்றும் நிர்வாகப் பல்கலைக்கழகத்தால் பல்வேறு நிலைகளில் மேற்கொள்ளப்பட்ட ஆலோசனைக்குப் பிறகு, இத்திட்டம் தமிழகத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. பள்ளிகளின் தரமானது பள்ளித் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் உதவியுடன் சுய மதிப்பீடும், ஆய்வு அலுவலர்கள், வல்லுநர்கள் மற்றும் மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன கல்வியாளர்கள் அடங்கிய குழு மூலம் புற மதிப்பீடும் செய்யப்படுகிறது.

இதற்காக பள்ளித் தரங்களம் மற்றும் மதிப்பீடு திட்ட இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது.இதில் ஒவ்வொரு பள்ளிக்கும் உள்ளீடு முகவரி மற்றும் கடவுச் சொல் உருவாக்கி அதன்மூலம் சுய மதிப்பீடு அறிக்கைகளை பதிவேற்றம் செய்யலாம். மேலும் மதிப்பீடு சார்ந்த கருத்துருக்களை பதிவிறக்கம் செய்யலாம்.அதேபோல புற மதிப்பீட்டாளர்களும் ஒவ்வொரு பள்ளிக்கும் உள்ளீடு முகவரி மற்றும் கடவுச் சொல் உருவாக்கி அதன் மூலம் புற மதிப்பீட்டு விவரங்கள் செலுத்தி, புற மதிப்பீட்டு அறிக்கையினை உருவாக்கலாம்.அவ்வாறு மதிப்பீடு அடிப்படையில் முதல், இரண்டு மற்றும் மூன்று என பள்ளிகள் தர அந்தஸ்து (கிரேடு) வழங்கப்படுகிறது.முதல் தரம் அந்தஸ்து என்றால் சுமார், 2-வது சாதாரணம், 3-வது தர அந்தஸ்து பெற்ற பள்ளி சிறந்த பள்ளி ஆகும்.2016-2017 ஆண்டிலேயே இத்திட்டம் நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்டிருந்தாலும், தற்போது 2016 நவம்பர் மாதத்தில் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு இத்திட்டம் குறித்த அடிப்படை பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.அரசுப் பள்ளிகள் அனைத்தும் உலகத் தரத்துக்கு இணையாக கல்வி வழங்கும் பள்ளிகளாக தரம் உயர்வதையும், நாடு முழுவதும் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் ஒரே சீரான தரத்துடன் கல்வி வழங்குவதையும் இத்திட்டம் உறுதிப்படுத்தும்.

தரங்கள் மதிப்பீடு செய்ய ஏழு முக்கியக் காரணிகள்

1. பள்ளி வளாகம், விளையாட்டு மைதானம், கணினி, வகுப்பறைகள், மின் சாதனங்கள், நூலகம், குடிநீர் வசதி, கழிப்பறை உள்ளிட்ட வளங்களை கையாளுதல்.
2. ஆசிரியர்கள் கற்போரை புரிந்து கொள்ளுதல், ஆசிரியர்களின் பாடம் மற்றும் கற்பித்தல் அறிவு, கற்பித்தலுக்கான திட்டமிடல் உள்ளிட்ட கற்றல், கற்பித்தல் மற்றும் மதிப்பிடுதல் ஆகும்.
3. கற்போரின் வருகை, கற்போரின் பங்கேற்பு மற்றும் ஈடுபாடு, கற்போரின் வளர்ச்சி ஆகியவை உள்ளடங்கிய கற்போரின் முன்னேற்றம், அடைவு மற்றும் வளர்ச்சியாகும்.
4. புதிய ஆசிரியர்களுக்கான ஆயத்தப் பயிற்சி, ஆசிரியர்களின் வருகை, செயல் இலக்குகளை வரையறுத்து பொறுப்புகளை ஒப்படைத்தல் ஆகியவற்றை உள்ளடக்கிய ஆசிரியர்களின் செயல்பாடு மற்றும் பணி சார்ந்த வளர்ச்சியினை நிர்வகித்தல் ஆகும்.
5. தொலைநோக்குச் சிந்தனைகளை உருவாக்குதல், மாற்றம் மற்றும் முன்னேற்றத்துக்கான செயல்பாடுகளை உள்ளடக்கியபள்ளித் தலைமை மற்றும் மேலாண்மையாகும்.
6. உள்ளடங்கிய கற்றல் சூழல், சிறப்புத் தேவையுள்ள குழந்தைகளுக்கான உள்ளடங்கிய கல்வி, உடல் பாதுகாப்பு, உளவியல் ரீதியான பாதுகாப்பு, சுகாதாரம் ஆகியவற்றை உள்ளடக்கிய உள்ளடங்குதல், ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பு.
7. பள்ளி மேலாண்மைக் குழு மற்றும் பள்ளி மேலாண்மை வளர்ச்சிக் குழு ஒருங்கிணைப்பு, பள்ளி முன்னேற்றத்தில் பங்கு, பள்ளிக்கும் சமுதாயத்துக்கும் இடையே உள்ளத் தொடர்பு, சமுதாயம கற்றல் வளம், சமுதாய மேம்பாடு ஆகியவற்றை உள்ளடக்கிய ஆக்கப்பூர்வமான சமுதாய பங்கேற்பு.

AYISHA SHORTFILM


ஞாயிறு, 27 நவம்பர், 2016

ரூ.500, 1000 நோட்டுகள் செல்லாத விவகாரம்: பண மதிப்பு நீக்கம் மட்டும் போதாது - வருமான வரித்துறை முன்னாள் முதன்மை ஆணையர் செந்தாமரை கண்ணன் கருத்து

500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவித்தது துணிச்சலான முடிவுதான். ஆனால் பண மதிப்பு நீக்கம் மட்டும் போதாது. தொடர்ந்து பல தொடர் நடவடிக்கை களை எடுக்கும் போதுதான் கறுப்பு பணத்தை நீக்க முடியும் என்று தமிழ்நாடு வருமான வரித்துறை முன்னாள் முதன்மை ஆணையர் செந்தாமரை கண்ணன் தெரிவித்துள்ளார்.
பழைய 500, 1,000 ரூபாய் நோட்டுகளை மாற்ற வங்கிகளிலும், அஞ்சலகங்களிலும் கடந்த 24-ம் தேதி வரை காத்து நின்றனர். ஏடிஎம் மையங்கள் முன்பு மக்கள் கூட்டம் இன்னும் குறைந்தபாடில்லை. வணிக நிறுவனங்களில் வியாபாரம் அடியோடு குறைந்துவிட்டது. ரியல் எஸ்டேட் தொழிலின் எதிர்காலம் எந்த திசையில் போகும் என்பதை பொதுமக்களால் கணிக்க இயல வில்லை. தங்க, வைர நகைகளின் விலை ஏறுமா அல்லது இறங்குமா என தெரியவில்லை. பழைய 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல் லாது என்ற மத்திய அரசின் அறி விப்பால் தாங்கள் சார்ந்த துறைக ளில் எதிர்காலத்தில் எவ்வித மாற் றங்கள் உருவாகும் என்பதை அறிந்து கொள்ள அனைத்து தரப்பு மக்களுமே மிகவும் ஆர்வ மாக உள்ளனர். எனவே, இந்த விவகாரத்தில் பொதுமக்கள் எதிர் கொள்ளும் பிரச்சினைகள், அவர் களின் சந்தேகங்கள், கேள்விகள் போன்றவற்றுக்கு பல்வேறு துறை களைச் சார்ந்த நிபுணர்களை திரட்டி ஒரு விவாத அரங்கிற்கு ‘தி இந்து’ தமிழ் நாளிதழ் சென்னையில் வெள்ளிக்கிழமை ஏற்பாடு செய்தி ருந்தது. இந்த நிகழ்ச்சியை தி இந்து தமிழ் நாளிதழுடன் எஸ்ஆர்எம் பல்கலைக்கழகம், நியூஸ் 18 தமிழ் நாடு, செயின்ட் ஜான்ஸ் பப்ளிக் ஸ்கூல், பிசினஸ் லைன் ஆகியவை இணைந்து வழங்கின.
இந்த விவாத அரங்கில், வரு மானவரித்துறை முன்னாள் முதன்மை ஆணையர் எஸ்.செந்தாமரை கண்ணன், தமிழ்நாடு, புதுச் சேரி முன்னாள் அக்கவுன்டன்ட் ஜெனரல் நாகல்சாமி, ரிசர்வ் வங்கி முன்னாள் அதிகாரி கே.சுந்தரேசன், சேலம் ஆடிட்டர் வீ.ரவீந்திரன், சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் கே.அழகுராமன், கல்விக்கடன் விழிப் புணர்வு இயக்க தலைமை ஒருங்கி ணைப்பாளர் எம்.ராஜ்குமார், சென்னை தங்கம் மற்றும் வைர வியாபாரிகள் சங்கத் தலைவர் ஜெயந்திலால் சலானி, ரூபி பில்டர்ஸ் நிர்வாக இயக்குநர் ரூபி ஆர்.மனோகரன், இந்திய ரியல் எஸ்டேட் நிறுவனங்களின் கூட்டமைப் பின் தலைவர் சுரேஷ் கிருஷ்ணன், சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ் துணை தலைவர் ராஜசேகரன், சங்கர் ஐஏஎஸ் அகாதமியின் நிறுவனர் சங்கர் ஆகியோர் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சியின் தொடக்கமாக ‘தி இந்து’ தமிழ் நாளிதழின் சிறப்பு நிருபர் குள.சண்முகசுந்தரம் வர வேற்று அறிமுகவுரை ஆற்றினார். பிஸினஸ்லைன் ஆசிரியர் ஆர்.ஸ்ரீனி வாசன் விவாதத்தை நெறிப்படுத்தி னார். முதல்கட்டமாக, ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாதது என அறிவிக்கப்பட்டது தொடர்பான பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட கருத்துகள் வீடியோவில் ஒளி பரப்பு செய்யப்பட்டன. அதைத் தொடர்ந்து, பிஸினஸ்லைன் ஆசிரி யர் ஸ்ரீனிவாசன் தொடக்கவுரையாற்றி னார். அப்போது அவர் கூறியதாவது:
கேள்வி எழுப்பும் பிரண்ட்லைன் இதழ் ஆசிரியர் விஜய்சங்கர்.
பல வாசகர்களின் சந்தேகங்கள் இங்கு ஒளிபரப்பப்பட்டன. ஒவ்வொரு வருக்கும் பிரத்யேகமான சந்தே கங்கள் இருந்தாலும், பொதுவாக அனைவருக்கும் சில சந்தேகங்கள் இருந்தன. பண மதிப்பு நீக்கத்துக்கான அவசியம் என்ன? கறுப்பு பணத்தை பெரும் பணக்காரர்கள் வைத்திருக்கும்போது இதனால் சாதாரண நபர் ஏன் பாதிக்கப்பட வேண்டும்? ரூ.500 மற்றும் 1,000 நோட்டுகளை நீக்கிவிட்டு புதிதாக ஏன் 2000 ரூபாய் நோட்டினை கொண்டுவரவேண்டும்? நோட்டு களை மதிப்பு நீக்கம் செய்ததால் எவ்வளவு பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. தவிர இந்திய கரன்ஸி என்பது இந்தியாவில் மட்டுமல்ல, வெளிநாடு வாழ் இந்தியர்களிடமும் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது.இவ்வாறு ஆர்.ஸ்ரீனிவாசன் கூறினார்.
தமிழ்நாடு வருமான வரித்துறை முன்னாள் முதன்மை ஆணையர் செந்தாமரை கண்ணன் கூறியதாவது:
500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறி வித்தது துணிச்சலான முடிவுதான். 200% அபராதம் போடுவார்கள் என்று வருவாய்த்துறை செயலாளர் கூறுகிறார். ஆனால் நடைமுறையில் இது சாத்தியமில்லாதது. வழக்கு தொடரும் போது, பெரும்பாலும் வரு மான வரித்துறை தோல்வி அடைந்து விடும், காரணம் அவர்களால் அதனை நிரூபிக்க முடியாது. சொல்ல விரும்பு வது என்ன வென்றால், உங்களிடம் எவ்வளவு கோடி ரூபாய் இருந்தாலும், அதனை வங்கியில் செலுத்துங்கள். அதற்கு ஏற்ப 30% முன் கூட்டியே வரி செலுத்தி மொத்த2 தொகையும் வெள்ளை பணமாக மாற்றுங்கள்.
நிகழ்ச்சியை வழிநடத்திய தி இந்து பிஸினஸ் லைன் ஆசிரியர் ஸ்ரீனிவாசன் மற்றும் தி இந்து தமிழ் நாளிதழ் சிறப்பு நிருபர் குள.சண்முகசுந்தரம்.
நான் பணியில் சேர்ந்த (1980-ம் ஆண்டு) சமயத்தில் ரூ.2,500 கோடி மட்டுமே மொத்த வரி வசூல் செய் யப்பட்டது. ஆனால் அடுத்த வருடத்துக்கு ரூ.8.47 லட்சம் கோடி இலக்கு நிர்ணயம் செய்திருக்கிறோம். ஆனால் இதற்கேற்ப பணியாளர்கள் இல்லை. இந்த நடவடிக்கையால் கறுப்பு பணம் நீங்கிவிடுமா என்று கேட்கிறார்கள். வீட்டில் குப்பை இருக்கிறது. அதனால் வீட்டை சுத்தப்படுத்துகிறோம். சில நாளைக்கு நன்றாக இருக்கும். அதனை தொடர்ந்து சுத்தப்படுத்த வேண்டும். அதுபோல மேலும் பல நடவடிக்கைகள் எடுக்க வேண்டியது அவசியம். இவ்வாறு அவர் கூறினார்.
நாகல்சாமி, தமிழ்நாடு, புதுச்சேரி முன்னாள் அக்கவுண்டன்ட் ஜெனரல்
நம் நாட்டின் மக்கள்தொகையில் 50 சதவீதம் பேர்தான் வங்கிச்சேவை பற்றி அறிந்தவர்களாக இருக்கிறார்கள். அவர்களுக்கு மின்னணு பணபரிவர்த்தனை பற்றி தெரியாது. காலங்காலமாக ரொக்கமாக பணபரிவர்த்தனை செய்துவந்தவர்களை திடீரென மின்னணு பணபரிவர்த்தனைக்கு எப்படி மாற்ற முடியும்? இது எளிதான விஷயம் அல்ல. நீண்டகாலமாக பின்பற்றப்பட்டு வரும் ரொக்க பயன்பாடு பழக்கத்தில் இருந்து மின்னணு பணபரிவர்த்தனைக்கு மாறுவதற்கு நீண்ட காலம் ஆகும். புதிதாக 2,100 கோடி நோட்டுகளை அச்சிட வேண்டியுள்ளது. நம்மால் மாதத்துக்கு 300 கோடிதான் பணம் அச்சடிக்க முடியும். எனவே, 2100 கோடி பணத்தை அச்சிட வேண்டுமானால் 7 மாதங்கள் ஆகும். எனவே, அதுவரையில் அனைவரும் கஷ்டங்களை அனுபவிக்க வேண்டும் போல்தான் தெரிகிறது. ஒரு ஜனநாயக நாட்டில் நமது வங்கிக்கணக்கில் இருந்து நமது தேவைக்கு ஏற்ப ரொக்க பணத்தை எடுக்க முடியாத நிலைமைதான் உள்ளது.
சுரேஷ் கிருஷ்ணன், நிர்வாக இயக்குநர் - இஷா ஹோம்ஸ்
பணமதிப்பு நீக்கம் காரணமாக வீடுகளின் விலை குறையும் என்பது பொதுவான எதிர்பார்ப்பு. ஆனால் சென்னையை பொறுத்தவரை அதற்கு வாய்ப்பு குறைவு. தவிர முறைப்படுத்தப்பட்ட நிறுவனங்கள் இதனால் பெரிய அளவில் பாதிப்படையாது.
சென்னையில் 90 சதவீதத்துக்கும் மேற்பட்ட வீடுகள் 1.5 கோடிக்கு கீழ் விற்கப்படுபவை ஆகும். 10 சதவீத வீடுகள்தான் இந்த தொகைக்கு மேல் இருக்கும். அதனால் அதைப்பற்றி விவாதிக்க ஒன்றும் இல்லை. இந்த 90 சதவீத வீடுகள் நடுத்தர மக்கள் வாங்குபவை. அவர்களால் எவ்வளவு முடியுமோ அந்தளவுக்கு வீட்டுக்கடன் வாங்கிதான் வீடு வாங்குகிறார்கள் என்பதால், இந்த சந்தையில் பெரிய பாதிப்பு இருக்காது. மாறாக வீடு வாங்கும் போக்கு உயரலாம். பண மதிப்பு நீக்கம் காரணமாக வங்கிகளில் அதிக சேமிப்பு வந்துக்கொண்டிருக்கிறது. அதனால் டெபாசிட்டுக்கான வட்டி குறைக்கப்படுகின்றன. வீட்டுக்கடனுக்கான வட்டியும் குறைக்கப்பட வாய்ப்பு இருக்கிறது. இதனால் வீடு வாங்குபவர்களின் எண்ணிக்கை உயரலாம்.
ரூபி ஆர் மனோகரன், நிறுவனர் ரூபி பில்டர்ஸ்
மத்திய அரசு எதையோ செய்ய நினைத்தது. ஆனால் நடந்தது வேறு. முதலை பிடிக்க வலை விரித்து சிறுமீன்கள் சிக்கிக்கொண்டன. சென்னை போன்ற நகரங்களில் இருக்கும் பில்டர்களுக்கு பிரச்சினை இல்லாமல் இருக்கலாம். ஆனால் சிறு நகரங்களில் இருக்கும் பில்டர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். விவசாயத்துக்கு பிறகு அதிகப்படியான தொழிலாளர்கள் இருப்பது கட்டுமானத்துறைதான். ஆனால் அவர்களில் பலர் வேலையில்லாமல் இருக்கிறார்கள் சனிக்கிழமை கூலி கொடுத்தால்தான் அவர்களால் அடுத்த வாரத்தை ஓட்ட முடியும். ஒவ்வொரு பில்டருக்கும் வாரம் சில லட்சம் ரூபாய் இருந்தால்தான் தொழிலாளிகளுக்கு கூலி கொடுக்க முடியும். பணம் எடுப்பதற்கு அரசு வைத்திருக்கும் வரம்பு மிகவும் குறைவானது. இதனை வைத்து எப்படி கூலி கொடுக்க முடியும்? மாற்று வழிகள் குறித்து உடனடியாக யோசிக்க வேண்டும்.
சங்கர், சங்கர் ஐஏஎஸ் அகாதமி
பண மதிப்பு நீக்கப்பட்டிருப் பதால் குறுகிய காலத்தில் பெரிய பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. கல்வியை பொறுத்தவரை, கிராமப் புறங்களில் வேலை வாய்ப்புகள் குறையும். அதனால் பெண் குழந்தைகள் பள்ளிக்கு செல்வது குறையும். அதேபோல பொறியியல் கல்லூரிகளில் சேர்க்கை குறையும். மதிப்பு நீக்கம், வேலை வாய்ப்பு குறைவு ஆகிய காரணங்களால் மாணவர்களிடையே பயம் உருவாகும். அதனால் போட்டித்தேர்வு எழுதும் மாணவர்களின் எண்ணிக்கை உயரும்.
ராஜசேகரன், துணைத்தலைவர் சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ்
தற்போதைய சூழலால் மக்கள் நம்பிக்கை இழந்திருக்கிறார்கள். இதேபோன்ற ஒரு சூழல் மீண்டும் வரக்கூடும் என்ற அச்சம் அதிகமாக இருப்பதால், கையில் பணத்தை வைத்திருக்கிறார்கள். முன்பெல்லாம் ஒரு நாளைக்கு 75,000 நபர்கள் கடைக்கு வருவார்கள், சராசரியாக ஒருவர் 1,500 ரூபாய்க்கு பொருட்கள் வாங்குவார். இப்போது மக்களிடையே பணம் இல்லாததால் ரங்கநாதன் தெரு காலியாக இருக்கிறது. ஒரு நாளைக்கு கடைக்கு வருபவர்களின் எண்ணிக்கை 5,000க்கு கீழ் வந்துவிட்டது. அப்படியே மக்கள் வந்தாலும், பெரிய விற்பனை இல்லை. தற்போது 2,000 ரூபாய் மட்டுமே புழக்கத்தில் இருப்பதால், அதனை சில்லரை மாற்றுவதற்காக கடைக்கு வருகின்றனர்.
பணமில்லா பரிவர்த்தனை குறித்த அச்சத்தை மக்களிடையே போக்க வேண்டும். அதற்கு தேவையான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும்.
ஜெயந்திலால் சலானி, தலைவர் சென்னை தங்கம் மற்றும் வைர வியாபாரிகள் சங்கம்
நவம்பர் 8-ம் தேதி இரவு கடையை மூடுவதற்கு தயாரானோம். ஆனாலும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை சிறிது அதிகமானதுபோல இருந்தது. சிறிது நேரத்தில் பெண்கள் கூட்டம் அதிகமானதை தொடர்ந்து விசாரித்தபோதுதான் எங்களுக்கு பண மதிப்பு நீக்கம் குறித்த விஷயம் தெரிந்தது. இதை எதற்காக சொல்கிறேன் என்றால் தங்கம் என்பது உலகளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட கரன்ஸி. பணத்துக்கு மாற்றாக தங்கத்தை மக்கள் கருதுகின்றனர். அதனால் அவர்களுக்கு தங்கத்தை மாற்றிக்கொடுத்தோம். ஆனால் அடுத்த சில நாட்களில் பொற்கொல்லர்களுக்கு கொடுக்க எங்களிடம் பணம் இல்லை. இவர்கள் பெரும்பாலும் மேற்கு வங்காளத்தில் இருந்து வருவதால் அவர்களுக்கு வங்கி கணக்கு இல்லை. அதனால் அவர்கள் மேற்கு வங்கத்துக்கே சென்றுவிட்டனர். விரைவில் இந்த நிலை மாற வேண்டும்.
கே.சுந்தரேசன், ரிசர்வ் வங்கியின் முன்னாள் அதிகாரி
பெரும்பாலானவர்களுக்கு ஏன் 2,000 ரூபாய் நோட்டு என்ற சந்தேகம் வரலாம். 500 மற்றும் 1,000 புழக்கத்தில் இருந்து நீக்கப்பட்டபிறகு, நீக்கப்பட்ட தொகைக்கு இணையான புதிய நோட்டுகளை அச்சடிப்பதற்கு கால தாமதம் ஏற்படலாம். அதனால் அதிக தொகைக்கு நோட்டுகளை விடும்போது பதற்றம் குறையும். அதற்காக 2,000 ரூபாய் நோட்டுகளை அச்சடிக்கிறார்கள் என்பது என் கணிப்பு. அதேபோல தற்போதைய பணப்புழக்க சிக்கல் லாஜிஸ்டிக்ஸ் காரணமாக நடக்கிறது. ரிசர்வ் வங்கிக்கு இந்தியா முழுவதும் இருக்கும் வாலட்கள் பழைய நோட்டுகளால் நிரம்பி வழிகின்றன. அவை செல்லாதவையாக இருந்தாலும், அவற்றை பத்திரப்படுத்த வேண்டியது ரிசர்வ் வங்கியின் பொறுப்பு. ரிசர்வ் வங்கியிடம் புதிய நோட்டுகள் இருந்தாலும் லாஜிஸ்டிக்ஸ் பிரச்சினையால் முழுமையான புழக்கத்துக்கு வர இன்னும் 5 வாரங்கள் வரை ஆகலாம். ரிசர்வ் வங்கி பொதுமக்களுக்கு ஏற்படும் சந்தேகங்களுக்கு தினமும் பதில் அளிக்கிறது. ரிசர்வ் வங்கியின் இணையதளத்தை மக்கள் படிக்க வேண்டும்.
வீ.ரவீந்திரன், சேலம் பட்டய கணக்காளர் சங்க துணைத்தலைவர்
இரு முக்கியமான விஷயங்களை பொதுமக்கள் கவனிக்க வேண்டும். திருமணத்துக்கு 2.5 லட்ச ரூபாய் பணம் எடுக்கலாம் என்றாலும், இந்த அறிவிப்பு வருவதற்கு முந்தைய நாள் (நவம்பர் 8) உங்கள் கணக்கில் பணம் இருந்தால் மட்டுமே எடுக்க முடியும். தற்போது முதலீடு செய்யும் தொகையை எடுக்க முடியாது. அடுத்த முக்கியமான பிரச்சினை ஜன்தன் வங்கி கணக்கில் 2.5 லட்ச ரூபாயை டெபாசிட் செய்வதாக தகவல்கள் வருகிறது. ஜன்தன் கணக்கில் 50,000 ரூபாய்க்கு மேல் செலுத்தும் போது, அந்த வங்கி கணக்கின் மூலமாக கிடைக்கும் சலுகைகள் ரத்தாகும் வாய்ப்பு இருக்கிறது. மானியங்கள் மற்றும் குறைந்த வட்டியில் கடன் ஆகியவை கிடைக்காமல் போகலாம். தவிர வருமான வரித்துறையிடம் இருந்து உங்களுக்கு நோட்டீஸ் வர வாய்ப்பு இருக்கிறது. அதனால் ஜன் தன் கணக்கு வைத்திருப்பவர்கள், அதனை தவறாக பயன்படுத்த வேண்டாம்.
கே.அழகுராமன், சென்னை உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞர்
இந்த நடவடிக்கை அமலுக்கு வந்த பிறகு பணமற்ற பரிவர்த்தனை குறித்து அனைவரும் பேசுகிறோம். ஆனால் நீதிமன்றங்களில் இப்போதைக்கு சாத்தியமில்லை. லட்ச ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும் என்றால் கூட ரொக்கமாகத்தான் கட்ட வேண்டும். பண மதிப்பு நீக்க நடவடிக்கை சரியா தவறா என்பதை இப்போதே முடிவு செய்வது சிரமம்.
எம்.ராஜ்குமார், கல்விக்கடன் விழிப்புணர்வு இயக்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர்
அதிகளவு டிஜிட்டல் முறையில் பணப்பரிமாற்றம் நடக்கும் ஸ்வீடன் போன்ற நாடுகள் கூட முற்றிலும் ரொக்கமற்ற நாடாக மாறவில்லை. ஆனால் 130 கோடி மக்கள் தொகையில் ரொக்கமற்ற நாடாக மாறவேண்டும் என்பது எப்படி சாத்தியம் என தெரியவில்லை.
இந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற முடிவெடுத்த பிறகு, முன்னேற்பாடுகள் செய்திருக்க வேண்டாமா? சிறிய தொகையை அதிகமாக புழக்கத்தில் வைத்திருக்கலாம். தற்போது ஏடிஎம்களுக்கு ஏற்ற வடிவத்தில் 2,000 ரூபாயை கொண்டு வந்திருக்கலாம். இது போல பல முன்னேற்பாடுகளை செய்திருக்க முடியும். ஆனால் குறிப்பிட்ட சில பிரிவினர் மட்டுமே இந்த முடிவினால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.

ரொக்கப் பணமில்லா பொருளாதாரத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறோம்: வானொலி உரையில் பிரதமர் மோடி

ரொக்கப்பணமில்லா பொருளாதாரத்தை நோக்கி நாடு சென்றுகொண்டிருப்பதாக மன் கி பாத் வானொலி உரையில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

இன்றைய வானொலி உரையில் அவர் பேசியதாவது:

‘எனதருமை நாட்டுமக்களே, வணக்கங்கள். கடந்த மாதங்களில் நாம் தீபாவளியைக் கொண்டாடி மகிழ்ந்தோம். ஒவ்வொரு ஆண்டைப் போலவே இந்த முறையும் தீபாவளியின் போது, நான் மீண்டும் ஒரு முறை படை வீரர்களோடு தீபாவளியைக் கொண்டாடி மகிழ, சீன எல்லைப் பகுதிகளுக்குச் சென்றேன். ITBP, இந்திய திபேத்திய எல்லைப்படை வீரர்கள், இராணுவ வீரர்கள் ஆகியோருடன் நான் இமயத்தின் சிகரங்களில் தீபாவளியைக் கொண்டாடினேன். நான் ஒவ்வொரு முறையும் செல்கிறேன், ஆனால் இந்த தீபாவளி அளித்த அனுபவம் அலாதியானது. நாட்டின் 125 கோடி மக்களூம் இந்த தீபாவளியை பாதுகாப்புப் படையினருக்கு அர்ப்பணித்தார்கள், இதன் தாக்கம் அங்கே இருந்த ஒவ்வொரு பாதுகாப்புப் படைவீரர் முகத்திலும் பிரதிபலித்தது. அவர்கள் உணர்வுகள் நிறைந்து காணப்பட்டார்கள்; இது மட்டுமல்லாமல் நாட்டு மக்கள் எனக்கு அனுப்பிய நல்வாழ்த்துச் செய்திகள், அவர்கள் தங்கள் சந்தோஷங்களில் நாட்டின் பாதுகாப்புப் படையினருக்கு பங்களித்தது ஆகியன அற்புதமான மறுமொழியாக அமைந்தது. மக்கள் வெறும் தகவல்களை மட்டும் அனுப்பவில்லை, மனதோடு இணைந்தார்கள்...

படையின் ஒரு வீரர் எனக்கு எழுதியிருந்தார் – பிரதமர் அவர்களே, படைவீரர்களான எங்கள் அனைவருக்குமே, தீபாவளி, ஹோலி போன்ற ஒவ்வொரு பண்டிகையும் எல்லைப்புறங்களிலேயே அமையும்; ஒவ்வொரு கணத்தையும் நாங்கள் நாட்டின் பாதுகாப்பு பற்றிய எண்ணங்களிலேயே செலவிடுவோம். ஆம், இருந்தாலும், பண்டிகை நாட்களில் வீடு பற்றிய நினைப்பு வந்து விடுகிறது. ஆனால் உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால், இந்த முறை அப்படிப்பட்ட நினைப்பே ஏற்படவில்லை. இந்தப் பண்டிகை நாளிலே நாம் வீட்டில் இல்லையே என்ற எண்ணம் கொஞ்சம் கூட ஏற்படவே இல்லை. ஏதோ, 125 கோடி பாரதவாசிகளோடு சேர்ந்து நாங்களும் தீபாவளியைக் கொண்டாடிக் கொண்டிருப்பதாகவே உணர்ந்தோம்.
எனதருமை நாட்டுமக்களே. இந்த தீபாவளிப் பண்டிகையின் போது, நமது நாட்டின் பாதுகாப்புப் படையினருக்கிடையில், படைவீரர்கள் மனதில் துளிர்த்த உணர்வு இந்த வேளையில் உண்டான அனுபவம், சில கணங்களோடு மறைந்து போக வேண்டுமா? நாம், ஒரு சமுதாயம் என்ற வகையில், நாடு என்ற முறையில், இந்த உணர்வை ஏற்படுத்துவது நமது இயல்பாக ஆக வேண்டும், நம் உணர்வுகளில் கலக்க வேண்டும் என்று நான் உங்கள் அனைவரிடமும் வேண்டுகோள் விடுக்கிறேன். எந்த ஒரு விழாவாக இருந்தாலும் சரி, பண்டிகையாக இருந்தாலும் சரி, சந்தோஷமான வேளையாக இருந்தாலும் சரி, நமது
நாட்டின் படைவீரர்களை நாம் ஏதாவது ஒரு வகையில் நினைவு படுத்திக் கொள்ள வேண்டும். நாடு முழுவதுமே படையினரோடு தோளோடு தோள் நிற்கும் போது, படையின் பலமும் சக்தியும் 125 கோடி மடங்கு அதிகரிக்கும் என்பது உறுதி.
சில காலம் முன்பாக ஜம்மு கஷ்மீரத்தின் கிராமங்களைச் சேர்ந்த அனைத்துத் தலைவர்களும் என்னைச் சந்திக்க வந்திருந்தார்கள். இவர்கள் ஜம்மு கஷ்மீரத்தின் பஞ்சாயத்து மாநாட்டைச் சேர்ந்தவர்கள். கஷ்மீரப் பள்ளத்தாக்கின் பல்வேறு கிராமங்களிலிருந்து வந்திருந்தார்கள். சுமார் 40-50 தலைவர்கள் இருந்தார்கள். கணிசமான நேரம் வரை அவர்களோடு உரையாடும் ஒரு சந்தர்ப்பம் எனக்கு வாய்த்தது. அவர்கள் தங்கள் கிராமங்களின் வளர்ச்சி தொடர்பான சில விஷயங்களைப் பேச வந்திருந்தார்கள், சிலர் சில கோரிக்கைகளோடு வந்திருந்தார்கள், ஆனால் உரையாடல் நீளத் தொடங்கிய போது, பள்ளத்தாக்கின் சூழல், சட்டம் ஒழுங்கு நிலைமை, பிள்ளைகளின் எதிர்காலம், என பல்வேறு விஷயங்கள் அதில் இடம் பெற்றன என்பது இயல்பான ஒன்றாக அமைந்தது. மிக்க அன்போடும், திறந்த மனதோடும், கிராமத்தின் இந்தத் தலைவர்கள் உரையாடிய விதம் இதயத்தைத் தொடும்படியாக அமைந்தது. பேச்சு வாக்கில், கஷ்மீரத்தில் எரிக்கப்பட்ட பள்ளிகள் பற்றிய பேச்சு எழுந்த போது, நம் நாட்டுமக்களுக்கு இதனால் எத்தனை துயரம் ஏற்பட்டதோ, அதைப் போலவே இந்த கிராமத் தலைவர்களுக்கும் ஏற்பட்டிருப்பதை என்னால் உணர முடிந்தது; பள்ளிகள் எரிக்கப்படவில்லை, பிள்ளைகளின் எதிர்காலம் தீக்கிரையாக்கப் பட்டிருக்கிறது என்றே அவர்கள் கருதினார்கள். நீங்கள் உங்கள் ஊர்களுக்குத் திரும்பிய பிறகு இந்தப் பிள்ளைகளின் எதிர்காலம் குறித்து உங்கள் கவனத்தைச் செலுத்துங்கள் என்று வேண்டிக் கொண்டேன். கஷ்மீர் பள்ளத்தாக்கிலிருந்து வந்த இந்த அனைத்துத் தலைவர்களும் எனக்கு அளித்த வாக்கினை மிகச் சிறப்பாக நிறைவேற்றினார்கள் என்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சியை அளிக்கிறது; அவர்கள் கிராமங்களுக்குச் சென்று தொலைவில் இருப்பவர்களுக்கும் விழிப்புணர்வு ஊட்டினார்கள். சில நாட்கள் முன்பாக வாரியத் தேர்வுகள் நடைபெற்ற போது, கஷ்மீரத்தின் 95 சதவீதக் குழந்தைகள், இந்த வாரியத் தேர்வுகளில் பங்கெடுத்துக்கொண்டார்கள்.

வாரியத் தேர்வுகளில் இத்தனை பெரிய எண்ணிக்கையில் மாணவ மாணவியர் பங்கு எடுத்துக் கொள்வது என்பது, ஜம்மூ கஷ்மீரத்தின் நமது குழந்தைகள் வளமான எதிர்காலத்துக்காக, கல்வி வாயிலாக, வளர்ச்சியின் புதிய சிகரங்களை எட்ட மனவுறுதி பூண்டிருக்கிறார்கள் என்பதையே நமக்குச் சுட்டிக் காட்டுகிறது. அவர்களின் இந்த ஊக்கத்திற்காக நான் அந்த மாணவர்களுக்கு என் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்ளும் அதே நேரத்தில், அவர்களின் பெற்றோர், உறவினர்கள், அவர்களின் ஆசிரியர்கள், அனைத்து கிராமத் தலைவர்கள் ஆகியோருக்கும் எனது இருதய பூர்வமான வாழ்த்துக்களை உரித்தாக்குகிறேன்.
அன்பு நிறை சகோதர சகோதரிகளே, இந்த முறை நான் மனதின் குரலுக்காக மக்களிடமிருந்து ஆலோசனைகளைக் கோரிய போது, அனைவரின் ஆலோசனைகளும் ஒரு விஷயம் பற்றியே வந்தது. அனைவருமே 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் குறித்து நான் விரிவான முறையில் பேச வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்கள். நவம்பர் மாதம் 8ஆம் தேதியன்று இரவு 8 மணிக்கு நாட்டு மக்களுக்கு நான் ஆற்றிய உரையில், நாட்டில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் பேரியக்கத்தைத் தொடங்குவது பற்றிப் பேசினேன். எந்த வேளையில் நான் இந்த தீர்மானத்தை மேற்கொண்டேனோ, அதை உங்கள் முன்பாக வைத்தேனோ, அப்போதே இந்த முடிவு சாதாரணமானது அல்ல, கஷ்டங்கள் நிறைந்த ஒன்று என்று நான் பொதுப்படையாகவே கூறினேன். ஆனால் தீர்மானம் எத்தனை மகத்துவம் வாய்ந்ததோ, அதே அளவு முக்கியம் அதை செயல்படுத்துவது என்பதும். நமது சராசரி வாழ்க்கையில் பலவகையான புதுப்புது கடினங்களை எதிர்கொள்ள வேண்டிவரும் என்பது எனக்கு உத்தேசமாகத் தெரியும். அப்போதுமே கூட இந்த முடிவு மிகப் பெரியது, இதன் பாதிப்பிலிருந்து நாம் மீண்டு வர 50 நாட்கள் ஆகி விடும் என்று கூறியிருந்தேன். அதன் பிறகு தான் இயல்பு நிலை நோக்கி நம்மால் அடியெடுத்து வைக்க முடியும். 70 ஆண்டுக்காலமாக நாம் என்னென்ன நோய்களையெல்லாம் சுமந்து வருகிறோமோ, அந்த நோய்களிலிருந்து விடுதலை பெறும் முயற்சி என்பது அத்தனை சுலபமாக இருக்க முடியாது. நீங்கள் சந்திக்கும் கஷ்டங்களை எல்லாம் என்னால் நன்றாகப் புரிந்து கொள்ள முடிகிறது.

ஆனால் உங்கள் ஆதரவை நான் பார்க்கும் வேளையில், உங்கள் ஒத்துழைப்பைக் காணும் போதினில், உங்களை திசை திருப்பி மிரள வைக்கும் ஏராளமான முயற்சிகளையும், தொய்வடைய வைக்கும் முயற்சிகளையெல்லாம் தாண்டி, நீங்கள் சத்தியமான இந்த வழியை நன்கு புரிந்து கொண்டு விட்டீர்கள், நாட்டு நலன் கருதி இந்த விஷயத்தை நீங்கள் ஏற்றுக் கொண்டு விட்டீர்கள் என்பதை என்னால் தெரிந்து கொள்ள முடிகிறது.

500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள், இத்தனை பெரிய தேசம், இத்தனை அளவு நோட்டுக்கள், பல இலட்சம் கோடி நோட்டுக்கள், இப்படிப்பட்ட தீர்மானம் – ஒட்டுமொத்த உலகமும் உன்னிப்பாக கவனித்து வருகிறது, ஒவ்வொரு பொருளாதார வல்லுனரும் இதை அதிகம் அலசிக் கொண்டிருக்கிறார்கள், மதிப்பீடு செய்து வருகிறார்கள். இந்துஸ்தானத்தின் 125 கோடி நாட்டு மக்களும் இடர்களை சகித்துக் கொண்டு வெற்றி பெற்று விடுவார்களா என்று ஒட்டு மொத்த உலகமும் இந்த விஷயத்தை கவனித்துக் கொண்டிருக்கிறது. உலகத்தோர் மனங்களில் ஒரு வேளை கேள்விக்குறி இருக்கலாம்! பாரதத்துக்கு, பாரதத்தின் 125 கோடி நாட்டு மக்கள் மீது அளப்பரிய நம்பிக்கை இருக்கிறது, 125 கோடி நாட்டு மக்களும் தங்கள் மனவுறுதிப்பாட்டின் இலக்கை எட்டியே தீர்வார்கள் என்ற உறுதிப்பாடு இருக்கிறது. நமது தேசம் சொக்கத் தங்கத்தைப் போல, ஒவ்வொரு வகையிலும் தகித்துப் பிரகாசிக்கும் என்றால் இதற்கான முழுமுதற் காரணம் நமது நாட்டின் குடிமக்கள் தான், அதற்கான காரணம் நீங்கள் தான், இந்த வெற்றிப் பாதை கூட உங்கள் காரணமாகத் தான் சாத்தியமாகியிருக்கிறது.

நாடு முழுவதிலும் மத்திய அரசு, மாநில அரசுகள், வட்டார உள்ளாட்சி அமைப்புக்களின் அனைத்துப் பிரிவுகள், ஒரு இலட்சத்து 30000 வங்கிக் கிளைகள், இலட்சக்கணக்கான வங்கிப் பணியாளர்கள், ஒண்ணரை இலட்சத்துக்கும் மேற்பட்ட தபால் அலுவலகங்கள், ஒண்ணரை இலட்சத்துக்கும் மேற்பட்ட வங்கி முகவர்கள், இரவு பகலாக இந்தப் பணியில் ஈடுபட்டார்கள், அர்ப்பணிப்பு உணர்வோடு இதில் பங்கு கொண்டார்கள். பலவகையான அழுத்தங்களுக்கு இடையில், இவர்கள் அனைவரும் மிகவும் அமைதியான மனதோடு,இந்த நாட்டுப்பணியை ஒரு வேள்வியாகவே கருதி, ஒரு மகத்தான மாற்றம் ஏற்படுத்தும் ஒரு முயற்சி என்றே கருதி இதில் முழுமனதோடு ஈடுபட்டார்கள்.

காலையில் தொடங்கி, இரவு எப்போது நிறைவு செய்வார்கள் என்பது தெரியக் கூட செய்யாது, ஆனால் அனைவரும் செய்கிறார்கள். இதன் விளைவாகத் தான் பாரதம் இந்தப் பணியில் வெற்றி பெறும் என்பது தெளிவாகத் தெரிகிறது. இத்தனை கஷ்டங்களுக்கு இடையேயும் கூட, வங்கிகளிலும், தபால் அலுவலகங்களிலும் அனைவரும் பணியாற்றுகிறார்கள் என்பதை நான் கண்கூடாகப் பார்க்கிறேன். மனித நேயம் என்ற விஷயம் வரும் போது, அவர்கள் சற்றுக் கூடுதலாகவே பயணித்துத் தான் செயல்பட்டு வருகிறார்கள். கண்டவா என்ற இடத்தில் ஒரு வயதானவருக்கு விபத்து ஏற்பட்டு விட்டது என்று ஒருவர் என்னிடம் கூறினார். திடீரென்று பணம் தேவைப்பட்டது. அங்கே இருக்கும் வங்கிப் பணியாளர் கவனத்துக்கு இந்த விஷயம் கொண்டு செல்லப்பட்ட போது, அவரே நேரில் முதியவர் இல்லம் சென்று பணத்தை சேர்ப்பித்து, சிகிச்சைக்கு எந்த இடையூறும் ஏற்படாமல் பார்த்துக் கொண்டார் என்பதை அறிந்து எனக்கு மகிழ்ச்சி ஏற்படுகிறது. இப்படிப்பட்ட கணக்கே இல்லாத பல சம்பவங்கள் ஒவ்வொரு நாளும் டிவியில், ஊடகங்களில், செய்தித் தாள்களில், உரையாடல்களில் இடம் பெறுகின்றன. இந்த மகா வேள்வியில் உழைப்பவர்கள், பங்களிப்பு நல்குபவர்கள் என அனைத்துத் தோழர்களுக்கும் நான் என் இருதயபூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். சோதித்துப் பார்க்கும் போது தான் உண்மையான சக்தி என்ன என்பது புரிய வரும்.

பிரதம மந்திரியின் ஜன் தன் திட்ட இயக்கம் முழுவீச்சில் நடைபெற்று வந்த போது, வங்கிப் பணியாளர்கள் எப்படி அதை தங்கள் தோள்களில் சுமந்தார்கள், 70 ஆண்டுகளில் முடியாத ஒரு காரியத்தை சாதித்துக் காட்டினார்கள் என்பதும் எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. அவர்கள் தங்கள் திறமையை அப்போது வெளிப்படுத்தினார்கள். இன்று மீண்டும் ஒரு முறை அதே போன்றதொரு சவாலை அவர்கள் எதிர்கொண்டிருக்கிறார்கள், 125 கோடி நாட்டுமக்களின் மனவுறுதி, அனைவரின் சமுதாய ரீதியிலான முனைப்பு, இந்த தேசத்தை ஒரு புதிய சக்தியாக உருமாற்றி சிறப்புறச் செய்யும் என்பதில் எனக்கு முழு நம்பிக்கை இருக்கிறது.

ஆனால் தீயவை எந்த அளவுக்குப் பரவியிருக்கிறது என்றால், இன்றும் கூட சிலரிடமிருந்து தீய நடைமுறைகள் ஒரு பழக்கமாகிப் புரையோடி இருக்கின்றன. இப்போதும் கூட இந்த ஊழல் பணம், இந்த கருப்புப் பணம், கணக்கில் காட்டப்படாத இந்தப் பணம், பினாமிப் பணம், ஆகியவற்றை ஏதோ ஒரு வழியைத் தேடிப் பிடித்து உயிர்ப்பித்து விடலாம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் தங்கள் பணத்தைக் காபந்து செய்ய சட்ட விரோதமான செயல்களைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள். இதில் அவர்கள் ஏழைகளைப் பயன்படுத்திக் கொள்ளும் பாதையைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள் என்பது வருத்தமளிக்கும் செய்தி. ஏழைகளை மதி மயக்கி, ஆசை வார்த்தைகள் பேசி அல்லது மனதை மயக்கி, அவர்களின் கணக்குகளில் பணத்தைப் போட்டோ, அவர்களிடமிருந்து ஏதோ ஒரு வேலையை வாங்கிக் கொண்டோ, தங்கள் பணத்தைக் காப்பாற்றிக் கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்கள். அப்படிப்பட்ட பேர்வழிகளிடம் நான் இன்று கூறிக் கொள்ள விரும்புவது ஒன்று தான் – திருந்துவதோ, திருந்தாமல் போவதோ உங்கள் இஷ்டம், சட்டத்தை மதித்து நடப்பதோ, நடக்காமல் இருப்பதோ உங்கள் இஷ்டம், என்ன செய்ய வேண்டும் என்பதை சட்டம் பார்த்துக் கொள்ளும். ஆனால் தயவு செய்து நீங்கள் ஏழைகளின் வாழ்கையோடு விளையாடாதீர்கள். பதிவுகளில் ஏழையின் பெயர் வந்து, பின்னர் புலனாய்வின் போது என் பிரியமான ஏழை உங்கள் பாவச்செயல் காரணமாகப் பிரச்சனையில் சிக்கும் வகையில் ஏதும் செய்யாதீர்கள். பினாமிச் சொத்துக்கள் தொடர்பாக மிகவும் கடுமையான சட்டம் இயற்றப்பட்டு இருக்கிறது, இது அமலுக்கு வரவிருக்கிறது, அதில் நிறைய கஷ்டங்கள் ஏற்படும். நமது நாட்டுமக்களுக்கு எந்த விதமான கஷ்டமும் ஏற்படக் கூடாது என்பதையே அரசு விரும்புகிறது.
மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த ஆஷீஷ் அவர்கள் 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் வாயிலாக ஊழல் மற்றும் கருப்புப் பணத்துக்கு எதிராகத்தொடுக்கப்பட்டிருக்கும் போர் பற்றி எனக்குத் தொலைபேசி வாயிலாக தெரிவித்தார், இதைப் பாராட்டினார் –
ஐயா வணக்கம், எனது பெயர் ஆஷீஷ் பாரே. நான் மத்திய பிரதேச மாநிலத்தின் ஹர்தா மாவட்டத்தில் இருக்கும் திராலி தாலுகாவின் திராலி கிராமத்தில் வசிக்கிறேன். நீங்கள் 500, 1000 ரூபாய் நோட்டுக்களின் நாணய விலக்கல் செய்திருப்பது பாராட்டுக்குரியது. பல அசவுகரியங்களைப் பொறுத்துக் கொண்டும் கூட தேசத்தின் முன்னேற்றத்துக்காக இந்தக் கடுமையான முயற்சிக்கு மக்கள் ஆதரவளித்திருக்கிறார்கள் என்பதை நீங்கள் பல எடுத்துக்காட்டுகள் மூலமாக மனதின் குரலில் விளக்க வேண்டும் என்று விரும்புகிறேன்; இதனால் மக்களுக்கு ஒரு வகையில் உற்சாகம் அதிகரிக்கும், தேசத்தை உருவாக்கும் பணியில் ரொக்கமில்லா வழிமுறை மிகவும் அவசியமானது, நான் ஒட்டுமொத்த நாட்டோடு இசைந்திருக்கிறேன், நீங்கள் இந்த 500-1000 ரூபாய் நோட்டுக்கள் விலக்கி இருப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது, என்று கூறியிருக்கிறார்.
இதே போல கர்நாடகத்தைச் சேர்ந்த யெல்லப்பா வேலான்கர் அவர்களும் தம் கருத்தைத் தெரிவித்திருந்தார் –
மோடிஜி வணக்கம், நான் கர்நாடக மாநிலத்தின் கொப்பல் மாவட்டத்தின் ஒரு கிராமத்திலிருந்து பேசுகிறேன். உங்களுக்கு நான் என் மனப்பூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன், ஏனென்றால், நீங்கள் தானே நல்ல நாட்கள் பிறக்கும் என்று சொன்னீர்கள்; ஆனால் இத்தனை பெரிய முயற்சியை நீங்கள் மேற்கொள்வீர்கள் என்று யாருமே எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் மூலமாக கருப்புப் பணம் வைத்திருப்போர், ஊழல்வாதிகள் ஆகியோருக்கு நல்லதொரு பாடத்தை நீங்கள் புகட்டியிருக்கிறீர்கள். இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கா விட்டால், பாரதத்தின் ஒவ்வொரு குடிமகனுக்கும் நல்ல காலம் எப்போதுமே ஏற்பட்டிருக்காது. இதற்காகவே நான் உங்களுக்கு என் மனப்பூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
சில விஷயங்கள் ஊடகம் மூலமாக, மக்கள் வாயிலாக, அரசு தரப்புகளிலிருந்து கிடைக்கப் பெறும் போது பணியாற்ற உற்சாகம் அதிகரிக்கிறது. என் தேசத்தின் சாமான்ய பிரஜையிடம் என்ன ஒரு அற்புதமான திறன் இருக்கிறது என்பது தெரிய வரும் போது அளவில்லாத ஆனந்தமும், பெருமிதமும் உண்டாகிறது. மகாராஷ்ட்ரத்தின் அகோலாவில், தேசிய நெடுஞ்சாலை 6இல் ஒரு உணவு விடுதி இருக்கிறது. அவர்கள் ஒரு மிகப் பெரிய அறிவிப்புப் பலகையை வைத்திருக்கிறார்கள்; உங்கள் வசம் பழைய நோட்டு இருந்தால் கூட, நீங்கள் உணவு உண்ண விரும்பினால், பணம் பற்றி கவலைப் பட வேண்டாம், இங்கிருந்து பசியோடு மட்டும் திரும்பிச் செல்ல வேண்டாம், உணவை உண்டு விட்டே செல்ல வேண்டும், எப்போதாவது இந்தப் பாதையில் நீங்கள் பயணிக்க வேண்டி வந்தால், கண்டிப்பாக பணத்தை செலுத்துங்கள் என்று எழுதப்பட்டிருக்கிறது. அங்கே மக்கள் செல்கிறார்கள், உணவு உண்கிறார்கள், 2-4-6 நாட்களுக்குப் பிறகு அந்த வழியாக மீண்டும் பயணிக்கும் போது, அவர்கள் பணத்தைத் திரும்பச் செலுத்துகிறார்கள். இது தான் என் தேசத்தின் சக்தி, இதில் சேவை மனப்பான்மை, தியாக உணர்வு ஆகியவை பளிச்சிடுகின்றன.
தேர்தல் காலத்தில் நான் தேநீர் வேளை உரையாடலில் ஈடுபட்டேன், உலகம் முழுவதிலும் இந்தக் கருத்து பரவியது. உலகின் பல நாட்டு மக்கள் தேநீர் வேளை உரையாடல் என்பதை சொல்லவும் தொடங்கி விட்டார்கள். ஆனால் இந்த தேநீர் வேளை உரையாடலின் போது திருமணங்கள் கூட நடைபெறும் என்பது எனக்குத் தெரியாமல் இருந்தது. நவம்பர் மாதம் 17ஆம் தேதி சூரத்தில் நடைபெற்ற ஒரு திருமணம், தேநீர் வேளை உரையாடலுடன் நடந்தது. குஜராத்தின் சூரத்தில் ஒரு பெண் தன் வீட்டு திருமணத்துக்காக வந்தவர்களுக்கு வெறும் தேநீர் மட்டுமே அருந்தக் கொடுத்தார், வேறு எந்த கொண்டாட்டங்களிலும் ஈடுபடவில்லை, எந்த விருந்துணவையும் படைக்கவில்லை, எதுவும் இல்லை – ஏனென்றால் நாணயவிலக்கல் காரணமாக பணத்தட்டுப்பாடு ஏற்பட்டிருந்தது. ஊர்வலத்தாரும் இதையே கௌரவம் என்று கருதினார்கள். சூரத்தின் பரத் மாரூ மற்றும் தக்ஷா பர்மார் – இவர்கள் தங்கள் திருமணம் வாயிலாக ஊழலுக்கு
எதிராக, கருப்புப் பணத்துக்கு எதிராக நடைபெற்று வரும் பெரும்போரில் தங்கள் பஙக்ளிப்பை நல்கியிருக்கிறார்கள், இதுவே பெரும் கருத்தூக்கம் அளிப்பதாக இருக்கிறது. நவபரிணீத் பரத்துக்கும் தக்ஷாவுக்கும் பலப்பல ஆசிகள் அளிக்கும் அதே வேளையில், திருமண வைபவத்தைக் கூட ஒரு மஹா வேள்வியாக உருமாற்றி, ஒரு புதிய வாய்ப்பாக அதை ஆக்கியதற்காக உங்களுக்கு நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இது போன்ற சங்கடங்கள் வரும் போது, மக்கள் அதற்கான தீர்வுகளையும் மிகச் சிறப்பாக அமைத்துக் கொள்கிறார்கள்.
தாமதமாக வீடு திரும்பிய வேளையில், ஒரு முறை டிவி செய்தியில் பார்க்க நேர்ந்தது. அசாம் மாநிலத்தின் தேகியாஜுலீ என்ற ஒரு சின்னஞ்சிறிய கிராமம் இருக்கிறது. தேயிலைத் தோட்டப் பணியாளர்கள் இருக்கிறார்கள், அவர்களுக்கு வாராந்திர அடிப்படையில் கூலி கிடைக்கிறது. இப்போது 2000 ரூபாய் நோட்டு கிடைத்திருக்கும் வேளையில் அவர்கள் என்ன செய்தார்கள்? அக்கம்பக்கத்தைச் சேர்ந்த 4 பெண்கள் ஒன்று கூடினார்கள், நால்வரும் ஒன்றாகச் சென்று பொருட்களை வாங்கினார்கள், 2000 ரூபாய் மூலமாக பணத்தை செலுத்தினார்கள், அவர்களுக்கு குறைவான மதிப்பு உடைய நாணயங்கள் தேவை இருக்கவில்லை, ஏனென்றால் நால்வருமாக இணைந்து பொருட்களை வாங்கினார்கள், அடுத்த வாரம் சந்திக்கலாம், அப்போது கணக்கு வழக்கைப் பார்த்துக் கொள்ளலாம் என்று தீர்மானித்தார்கள். மக்கள் தங்களுக்குள்ளாகவே பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்கிறார்கள். இதில் ஏற்பட்ட மாற்றத்தை நீங்கள் கவனியுங்கள். எங்கள் பகுதிக்கு ஏ.டி.எம்.மைக் கொண்டு வாருங்கள் என்று அசாமின் தேயிலைத் தோட்டப் பணியாளர்கள் கோரிக்கை பற்றி அரசுக்கு தகவல் கிடைத்தது, கிராமப்புற மக்கள் வாழ்க்கையில் எப்படிப்பட்ட மாற்றங்கள் ஏற்படுகின்றன பாருங்கள். இந்த இயக்கம் வாயிலாக சிலருக்கு உடனடியாக பலன் கிடைத்திருக்கிறது. தேசத்துக்கு இனிவரும் நாட்களில் பலன் கிட்டும், ஆனால் சிலருக்கு லாபம் உடனடியாக வசப்பட்டிருக்கிறது. நடந்திருப்பவை பற்றி நான் கேட்ட போது, சின்னச்சின்ன நகரங்களிலிருந்து சில தகவல்கள் எனக்குக் கிடைக்கப் பெற்றன.

சுமார் 40-50 நகரங்கள் தொடர்பானதகவல்கள் எனக்குக் கிடைத்தன, இந்த நாணய விலக்கல் காரணமாக பழைய பாக்கிகள் எல்லாம் வசூலாயின, வரி ஏய்ப்பு செய்தவர்கள் – தண்ணீர் மீதான வரி, மின்சாரம் மீதான வரி போன்றவற்றை செலுத்தாதவர்கள் பற்றி உங்களுக்கே நன்றாகத் தெரியும் – ஏழை பாழைகள் எல்லாம் 2 நாட்கள் முன்னதாகவே சென்று செலுத்தி விடும் பழக்கத்தை மேற்கொண்டிருப்பார்கள். சக்தி படைத்தவர்கள், சட்டத்தின் கரங்களுக்கு அப்பால் இருப்பவர்கள், அவர்களைக் கேள்வி கேட்பார் யாரும் இல்லை, அவர்கள் தான் பணத்தை செலுத்துவதே இல்லை. அவர்கள் கணக்கில் ஏகப்பட்ட பாக்கி இருக்கும். ஒவ்வொரு நகராட்சியும் மிகவும் சிரமப்பட்டு 50 சதவீதத் தொகையையே ஈட்டுகிறது. ஆனால் இந்த முறை 8ஆம் தேதியின் இந்த தீர்மானம் காரணமாக, அனைவரும் தங்கள் பழைய நோட்டுக்களை செலுத்த ஓடோடி வந்தார்கள். 47 நகர அலகுகளில் கடந்த ஆண்டு இந்த காலகட்டத்தில் சுமார் 3000-3500 கோடி ரூபாய் வரி வசூல் செய்யப்பட்டது. இந்த ஒரு வாரக்காலத்தில் மட்டும் அவர்களுக்கு 13000 கோடி ரூபாய் பணம் வசூலாகி இருக்கிறது என்ற தகவல் உங்களுக்கு ஆச்சரியத்தையும் ஆனந்தத்தையும் ஒருசேர அளிக்கலாம். 3000-3500 கோடி ரூபாய் எங்கே, 13000 கோடி எங்கே!! அதுவும் நேரடியாக வந்து செலுத்தியிருக்கிறார்கள். இப்போது இந்த நகராட்சிகளுக்கு 4 மடங்குப் பணம் வந்திருப்பதால், ஏழை மக்களுக்காக கழிவுநீர் அமைப்புக்கள் ஏற்படுத்தப்படுவதோ, நீர் வழங்கல் அமைப்புக்கள் உருவாக்கப்படுவதோ, ஆங்கன்வாடி மையங்கள் நிறுவப்படுவதோ இயல்பாகவே அமையும் இல்லையா? நேரடிப் பயன்கள் கண்ணுக்குத் தெரியும் வகையில் ஏற்பட்டிருக்கும் இப்படிப்பட்ட பல எடுத்துக்காட்டுக்கள் உள்ளன.
சகோதர சகோதரிகளே, நமது கிராமங்கள், நமது விவசாயிகள், இவர்கள் நம் நாட்டின் பொருளாதாரத்தின் பலமான தூண்கள். ஒரு புறம் பொருளாதாரத்தின் இந்த புதிய மாற்றம் காரணமாக, இடர்களுக்கு இடையே, ஒவ்வொரு குடிமகனும் அதற்கேற்ப தன்னைத் தானே சீர்செய்து கொண்டு வருகிறார். ஆனால் நான் என் தேச விவசாயிகளுக்கு இன்று சிறப்பாக என் வணக்கங்களைத் தெரிவிக்க விரும்புகிறேன். இப்போது தான் நான் இந்தப் பருவத்தின் விதைப்பு
தொடர்பான புள்ளி விபரங்கள் பற்றி விசாரித்துக் கொண்டிருந்தேன். கோதுமையாகட்டும், பருப்பு வகைகளாகட்டும், எண்ணெய்ப் பயிர்கள் ஆகட்டும், நவம்பர் 20ஆம் தேதி வரை என்னிடம் கணக்கு இருக்கிறது, கடந்த ஆண்டு இதே காலகட்டத்தோடு ஒப்பிடும் போது, விதைப்பு அதிகரித்திருக்கிறது. கஷ்டங்களுக்கு இடையேயும், விவசாயிகள் ஒரு வழியைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். அரசுமே கூட பல முக்கியமான தீர்மானங்களை மேற்கொண்டிருக்கிறது, இதில் விவசாயிகளுக்கும், கிராமங்களுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருக்கிறது. அதன் பிறகும் கூட கஷ்டங்கள் இருக்கின்றன என்றாலும், இயற்கை இடர்களாகட்டும், எந்த ஒரு இன்னலாகட்டும் அவற்றை சகித்துக் கொண்டு உறுதியாக சமாளிக்கும் நமது விவசாயி, இந்த முறையும் மனவுறுதியோடு இதை எதிர்கொண்டிருக்கிறார்.
நமது நாட்டின் சிறிய வியாபாரிகள் வேலைவாய்ப்பையும் அளிக்கிறார்கள், பொருளாதார செயல்பாடுகளையும் மேம்படுத்துகிறார்கள். கடந்த வரவுசெலவுத் திட்ட அறிக்கையில் நாங்கள் ஒரு மகத்துவம் நிறைந்த முடிவைச் செய்தோம்; பெரிய பெரிய mallகளைப் போலவே, கிராமங்களில் உள்ள சின்னச் சின்ன கடைகளும் கூட 24 மணி நேர வியாபாரம் செய்ய முடியும், எந்த சட்டமும் அவர்களுக்குத் தடை விதிக்காது. ஏனென்றால், பெரிய பெரிய mallகளுக்கு எல்லாம் 24 மணி நேரம் திறக்க வாய்ப்பு கிடைக்கும் போது, கிராமத்தின் ஏழை கடைக்காரருக்கு ஏன் இப்படி ஒரு சந்தர்ப்பம் கிடைக்க கூடாது என்பது என் கருத்தாக இருந்தது. முத்ரா திட்டத்தின்படி அவர்களுக்கு கடன் அளிக்கும் விதமாக முனைப்புகள் மேற்கொள்ளப்பட்டன. பல கோடிக்கணக்கான ரூபாய் முத்ரா திட்டத்தின் படி எளிய மக்களுக்கு அளிக்கப்பட்டது, ஏனென்றால் இது போன்ற சிறு தொழில்களில் கோடிக்கணக்கான பேர் ஈடுபட்டு வருகிறார்கள், பல இலட்சம் கோடிக்கணக்கான ரூபாய் வியாபாரத்துக்கான வேகத்தை அளிக்கிறார்கள். ஆனால் இந்த தீர்மானம் காரணமாக அவர்களுக்கும் சிரமங்கள் ஏற்படுவது என்பது
இயல்பான ஒன்று தான்; இப்படிப்பட்ட நிலையிலும், நமது இந்த சிறு வியாபாரிகளும் கூட தொழில்நுட்பம் வாயிலாக, mobile app வாயிலாக, மொபைல் வங்கி வாயிலாக, கடன் அட்டை வாயிலாக, தங்கள் தங்கள் வழிமுறைகள் மூலம் நுகர்வோர் சேவையில் ஈடுபட்டு வருவதையும், நம்பிக்கையின் அடிப்படையில் செயல்பட்டு வருவதையும் என்னால் பார்க்க முடிந்தது.
இன்று நான் எனது சிறு வணிகம் செய்யும் சகோதர சகோதரிகளிடம் கூற விரும்புவதெல்லாம், இதை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்தி நீங்கள் டிஜிட்டல் உலகில் நுழையுங்கள். நீங்களும் உங்கள் மொபைல் ஃபோன் மூலமாக வங்கிகளின் appஐ தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள். கடன் மற்றும் பற்று அட்டைகளின் பரிவர்த்தனைகளுக்கான விற்பனை முக (Point of Sale) இயந்திரத்தை வைத்துக் கொள்ளுங்கள். நீங்களும் எப்படி ரொக்கப் பணத்தைக் கையாளாமல் வியாபாரம் செய்வது என்பதைக் கற்றுக் கொள்ளுங்கள். எப்படி பெரிய mallகள் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தங்கள் வியாபாரத்தைப் பெருக்கிக் கொள்கிறார்களோ, அதைப் போல, ஒரு சிறிய வியாபாரியும், எளிமையான பயனாளிக்கு நேசமான தொழில்நுட்பம் வாயிலாக, தனது வியாபாரத்தைப் பெருக்கிக் கொள்ள முடியும். இதில் சிரமப்பட வேண்டிய அவசியமே இல்லை, சிறப்பான வாழ்க்கையே ஏற்படும். ரொக்கப் பணப்பரிவர்த்தனை இல்லா சமுதாயத்தை உருவாக்க உங்கள் பங்களிப்பு மிகப் பெரியதாக இருக்க முடியும், நீங்கள் உங்கள் வியாபாரத்தைப் பெருக்கிக் கொள்ள, மொபைல்போன் மூலமாக மொத்த வங்கிச் செயல்பாடுகளையும் பயன்படுத்திக் கொள்ள முடியும், இன்று நோட்டுக்களை கையாளாமல், வியாபாரத்தை பல வழிகளில் நம்மால் நடத்த முடியும். தொழில்நுட்ப வழிகள் இருக்கின்றன, அவை பாதுகாப்பானவை, விரைவானவை. நீங்கள் இந்த இயக்கம் வெற்றி பெற உங்கள் ஒத்துழைப்பை அளிக்கவேண்டும் என்று மட்டும் நான் விரும்புகிறேன்.

இது மட்டுமல்ல, மாற்றத்தை நீங்கள் தான் தலைமையேற்றி நடத்திச் செல்ல வேண்டும், இப்படிப்பட்ட தலைமையை உங்களால் அளிக்க முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. ஒட்டுமொத்த கிராமத்தின் வியாபாரத்தையும் நீங்கள் இந்தத் தொழில்நுட்பத்தின் துணை கொண்டு செய்ய முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. உழைப்பாளி சகோதர சகோதரிகளிடத்திலும் நான் கூற விரும்புவது, உங்களுக்கு அதிக அநீதி இழைக்கப்பட்டிருக்கிறது என்பது தான். காகிதத்தில் குறிக்கப்பட்டிருக்கும் ஊதியம் ஒன்று, உங்கள் கைகளில் கொடுக்கப்படும் தொகையாக வேறு என்ற நிலைமை ஒன்று. எப்போதாவது மொத்த ஊதியமும் கைகளில் கிடைத்தாலும், வெளியே ஒருவர் நின்று கொண்டிருப்பார், அவருக்கு ஒரு பங்கை உங்கள் ஊதியத்திலிருந்து கொடுக்க வேண்டி இருக்கும், பலவந்தமாக இப்படிப்பட்ட கொடுமை நிறைந்த வாழ்க்கையை வாழும் நிலைக்கு கூலித் தொழிலாளி தள்ளப் படுகிறார். இந்த புதிய வழிமுறை வாயிலாக, வங்கிகளில் உங்களுக்கென ஒரு கணக்குத் தொடங்கப்பட்டு, உங்கள் ஊழியத் தொகை உங்கள் வங்கிக் கணக்கில் சேர்க்கப்பட வேண்டும், குறைந்தபட்ச ஊதியம் என்ற விதிமுறை பின்பற்றப்படுவதை இதன் மூலம் உறுதி செய்ய முடியும். உங்களுக்கு உங்கள் ஊதியம் முழுக்க கிடைக்க வேண்டும், யாருக்கும் பங்கு கொடுக்க வேண்டியிருக்காது. உங்கள் மீது கொடுமை இழைக்கப்படக் கூடாது. உங்கள் வங்கிக் கணக்கில் பணம் வந்து சேர்ந்து விட்டால், நீங்களுமே கூட ஒரு சின்ன மொபைல்போன் மூலமாக, அக்கம்பக்கக் கடைகளில் பொருள் வாங்க முடியும், அதன் மூலமாகவே பணத்தை செலுத்தி விடவும் முடியும்; இதற்கு எந்த ஸ்மார்ட் போனும் தேவையில்லை, இப்போதெல்லாம் உங்கள் மொபைல் போனே கூட ஈ-வேலட் என்ற வகையில் உங்கள் பர்ஸ் செய்யும் வேலையைச் செய்து விடுகிறது. ஆகையால் என் உழைப்பாளி சகோதர சகோதரிகளே,இந்தத் திட்டத்தில் உங்கள் பங்களிப்பை நான் சிறப்பாக வேண்டுகிறேன், ஏனென்றால் இத்தனை பெரிய ஒரு முடிவை நான் நாட்டின் ஏழைகளுக்காக, விவசாயிகளுக்காக, தொழிலாளிகளுக்காக, நசுக்கபட்டவர்களுக்காக, உரிமைகள் மறுக்கப்பட்டவர்களுக்காக, பாதிக்கப்பட்டவர்களுக்காக, அவர்களுக்கு நலன்கள் கிடைக்க வேண்டும் என்பதற்காகவே மேற்கொண்டிருக்கிறேன்.
இன்று நான் விசேஷமாக இளைஞர்களோடு உரையாட விரும்புகிறேன். பாரதத்தில் 65 சதவீதத்தினர் 35 வயதுக்குட்பட்டவர்களாக இருக்கிறார்கள் என்று உலகம் முழுக்க தண்டோரா போட்டு வருகிறோம். நீங்கள் என்னாட்டின் இளைஞர்கள், யுவதிகள், நான் எடுத்திருக்கும் இந்த முடிவு உங்களுக்குப் பிடித்திருக்கிறது என்பதை நான் நன்கறிவேன். நீங்கள் இந்த முடிவை முழுமையாக ஆதரிக்கிறீர்கள் என்பதும் எனக்குத் தெரியும். இதை ஆக்கபூர்வமான வழிகளில் முன்னெடுத்துச் செல்ல பெருமளவு பங்களிப்பு அளித்துக் கொண்டிருக்கிறீர்கள் என்பதையும் நான் அறிவேன். தோழர்களே, நீங்கள் தான் எனது உண்மையான சிப்பாய்கள், நீங்களே என் உண்மைத் தோழர்கள். அன்னை பாரத மாதாவுக்கு சேவை செய்ய ஒரு அற்புதமான வாய்ப்பு நம் அனைவருக்கும் வாய்த்திருக்கிறது, இது தேசத்தைப் பொருளாதார சிகரங்களை நோக்கிக் கொண்டு செல்லும் பொன்னான வாய்ப்பு. எனது இளைய சமுதாய நண்பர்களே, உங்களால் எனக்கு உதவி செய்ய இயலுமா? எனக்கு துணை நிற்பதோடு மட்டும் வேலை முழுமை பெறாது. இன்றைய உலக நடைமுறை பற்றி உங்களுக்கு இருக்கும் அளவுக்கு, முந்தைய தலைமுறையினருக்கு இல்லை. ஏன், உங்கள் குடும்பத்திலேயே கூட உங்கள் மூத்த சகோதரருக்கு, உங்கள் தாய் தந்தையருக்கு, சித்தப்பா சித்திகளுக்கு, மாமா மாமிகளுக்கு உங்கள் அனுபவம் இல்லாமல் இருக்கலாம். App, அதாவது செயலி என்றால்
என்ன என்பதை நீங்கள் நன்கறிவீர்கள், ஆன்லைன் பேங்கிங், அதாவது கணிணி மூலம் வங்கியலுவல் என்றால் என்ன என்பதை நீங்கள் அறிவீர்கள், கணிணி மூலம் பயணச்சீட்டுப் பதிவு ஆகியவற்றை நீங்கள் அறிவீர்கள். உங்களுக்கு இந்த விஷயங்கள் மிக எளிமையானவை, நீங்கள் இவற்றைப் பயன்படுத்தவும் செய்கிறீர்கள். ஆனால் இன்று நாடு செய்ய விரும்பும் மகத்தான பணி, நமது கனவான ரொக்கப் பணப்பரிவர்த்தனை இல்லா சமுதாயம். நூறு சதவீதம் ரொக்கப் பரிவர்த்தனை இல்லா சமுதாயம் என்பது சாத்தியமல்ல என்பது சரி தான். ஆனால் ஏன் நாம் பாரதத்தை குறைந்த ரொக்கப் பயன்பாட்டு சமுதாயமாக ஆக்க ஒரு தொடக்கத்தைச் செய்யக் கூடாது. ஒரு முறை நீங்கள் இந்தக் குறைந்த ரொக்கப் பயன்பாட்டு சமூகம் என்பதைத் தொடங்கி விட்டால், ரொக்கப் பரிவர்த்தனையே இல்லாத சமூகம் என்ற இலக்கு தொலைவில் இருக்காது. எனக்கு இந்த விஷயத்தில் உங்கள் உடல்ரீதியான உதவி, உங்கள் நேரம், உங்கள் உறுதிப்பாடு ஆகியன தேவை. நீங்கள் எப்போதும் எனக்கு ஏமாற்றம் அளிக்க மாட்டீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது; ஏனென்றால், நாம் அனைவரும் இந்துஸ்தானத்தின் ஏழையின் வாழ்க்கையை மாற்ற வேண்டும் என்ற ஆசையை மனதில் சுமந்து கொண்டிருப்பவர்கள். ரொக்கப் பணப் பரிவர்த்தனை இல்லா சமூகத்தை ஏற்படுத்த, டிஜிட்டல் வங்கி சேவையை அறிமுகப்படுத்த அல்லது மொபைல் வங்கிச் சேவையை அறிமுகப்படுத்த இன்று எத்தனை வாய்ப்புக்கள் ஏற்பட்டிருக்கின்றன என்பதை நீங்கள் அறிவீர்கள். ஒவ்வொரு வங்கியும் ஆன்லைன் வசதியை அளிக்கிறது. ஹிந்துஸ்தானத்தின் ஒவ்வொரு வங்கியிடமும் பிரத்யேகமான ஒரு மொபைல் app இருக்கிறது, ஒவ்வொரு வங்கியிடமும் பிரத்யேகமான வாலட் இருக்கிறது. வாலட்டின் நேரடிப் பொருள் e-purse. பலவகையான அட்டைகள் கிடைக்கின்றன. ஜன் தன் திட்டத்தின்படி பாரதத்தின் கோடிக்கணக்கான ஏழைக் குடும்பங்களிடம் ரூபே அட்டை இருக்கிறது,
மிகக் குறைவாகவே பயன்படுத்தப்பட்டு வந்த ரூபே அட்டை, 8ஆம் தேதிக்குப் பிறகு, அதிகமாகப் பயன்படத் தொடங்கி விட்டது, சுமாராக 300 சதவீதம் வளர்ச்சி கண்டிருக்கிறது. மொபைல் போனில் வரும் prepaid அட்டையைப் போலவே வங்கிகளிடமும் பணத்தை செலவு செய்ய prepaid அட்டை கிடைக்கிறது. வியாபாரம் செய்ய ஒரு அருமையான தளம் UPI, இதன் மூலமாக நீங்கள் பொருட்களை வாங்கவும் முடியும், பணத்தை அனுப்பவும் முடியும், பணத்தைப் பெறவும் முடியும். இந்தப் பணி நீங்கள் வாட்ஸ்அப்பில் தகவல் அனுப்புவதைப் போல அத்தனை எளிமையானது. எந்தப் படிப்பும் இல்லாதவருக்குக் கூட இன்று வாட்ஸ்அப்பில் தகவல் எப்படி அனுப்ப வேண்டும் என்று தெரிந்து வைத்திருக்கிறார், எப்படி ஃபார்வர்ட் செய்ய வேண்டும் என்று அறிந்து வைத்திருக்கிறார். இது மட்டுமல்லாமல், இந்த வேலைக்கு பெரிய ஸ்மார்ட் போன் எல்லாம் தேவை என்றில்லாத அளவுக்கு தொழில்நுட்பம் மிகவும் எளிமையானதாக இருக்கிறது. சாதாரண வசதிகள் கொண்ட போன் மூலமாகக் கூட பணப் பரிமாற்றம் செய்து கொள்ள முடியும். சலவைத் தொழிலாளி, காய்கறி விற்பனையாளர், பால் விற்பனையாளர், செய்தித்தாள் விற்பனையாளர், தேநீர்க்கடைக்காரர், பலகாரம் விற்பனை செய்பவர் என யாராக இருந்தாலும் இதை எந்தச் சிரமமும் இல்லாமல் பயன்படுத்திக் கொள்ளலாம். நான் இந்த வழிமுறையை மேலும் சுலபமாக்கும் முயற்சிகளுக்கு அழுத்தம் கொடுத்திருக்கிறேன். அனைத்து வங்கிகளும் இதில் ஈடுபட்டிருக்கின்றன, செய்து கொண்டிருக்கின்றன. இப்போது நாங்கள் ஆன்லைன் வர்த்தகத்திற்கான கூடுதல் கட்டணத்தையும் ரத்து செய்து விட்டோம். மேலும், ரொக்கப் பரிவர்த்தனை இல்லாத சமூகம் என்ற கருத்துக்கு வலு சேர்க்க, அட்டை தொடர்பான இது போன்ற வரிகளையெல்லாம் முடிவுக்குக் கொண்டு வந்து விட்டோம், இதை நீங்கள் கடந்த 2-4 நாட்களுக்குள்ளான செய்தித்தாள்களில் பார்த்திருக்கலாம்.
எனது இளைய நண்பர்களே, இவையனைத்தும் ஆன பிறகும் ஒரு தலைமுறை முழுவதுக்கும் இது பரிச்சயமில்லாததாக இருக்கிறது. நீங்கள் அனைவரும் இந்த மகத்தான பணியில் ஆக்கப்பூர்வமாக இணைந்திருக்கிறீர்கள் என்பதை நான் நன்கறிவேன். WhatsAppல் படைப்பாற்றல் மிக்க செய்திகளை நீங்கள் அளித்தல், கோஷங்கள், கவிதைகள், துணுக்குகள், கார்ட்டூன்கள், புதிய புதிய கற்பனை, நகைச்சுவை என அனைத்தையும் நான் கவனித்து வருகிறேன்; சவால்களுக்கு இடையேயும் நமது இளைய சமுதாயத்தினரின் படைப்புத் திறனைப் பார்க்கும் போது எனக்கு என்ன படுகிறது என்றால், போர்க்களத்தில் கூட ஒரு காலத்தில் கீதை பிறந்தது என்பது தான் இந்த பாரத பூமியின் விசேஷம் என்பதைப் போல, இன்று இத்தனை பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் காலத்தை நாம் சந்திக்கும் வேளையில் உங்களுக்குள்ளே ஒரு அடிப்படையான படைப்பாற்றல் வெளிப்படுவதை நான் பார்க்கிறேன். ஆனால் எனக்குப் பிரியமான இளைய தோழர்களே, நான் மீண்டும் ஒரு முறை கூறுகிறேன், எனக்கு இந்தப் பணியில் உங்கள் உதவி தேவைப்படுகிறது. ஆம், ஆம் ஆம், நான் மீண்டும் ஒரு முறை கூறுகிறேன், எனக்கு உங்கள் உதவி தேவை, நீங்கள், இந்த தேசத்தின் கோடிக்கணக்கான இளைஞர்கள் இந்தப் பணியை செய்வீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. நீங்கள் ரொக்கப் பரிவர்த்தனை இல்லாத சமூகத்தின் ஒரு பகுதியாக இருப்பீர்கள் என்று இன்று முதல் உறுதி பூணுங்கள். உங்கள் மொபைல் ஃபோனில் ஆன்லைன் செலவுகளுக்கான அனைத்துத் தொழில்நுட்பத்தையும் தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள். இது மட்டுமில்லாமல், ஒவ்வொரு நாளும் அரை மணி நேரம், ஒரு மணி நேரம், 2 மணி நேரம் என உங்களால் எத்தனை நேரம் அளிக்க முடியுமோ, குறைந்த பட்சம் 10 குடும்பங்களுக்கு நீங்கள் இந்த தொழில்நுட்பம் பற்றிய விபரங்கள், இதை எப்படி பயன்படுத்த வேண்டும், எப்படி தத்தமது வங்கிகளின் Appஐ தரவிறக்கம் செய்யமுடியும், தங்கள் வங்கிக் கணக்கில் இருக்கும் பணத்தை செலவு செய்யும் வழிமுறை என்ன, எப்படி கடைக்காரருக்குப் பணம் கொடுக்க முடியும் என்று கற்றுக் கொடுங்கள். அதே போல கடைக்காரருக்கும் இந்த வழிமுறையில் எப்படி வியாபாரம் செய்ய முடியும் என்பதைப் புரிய வையுங்கள். ரொக்கப் பணப் பரிவர்த்தனையில்லாத சமூகம், நோட்டுக்களின் வலையிலிருந்து வெளிவரும் பேரியக்கம், நாட்டை ஊழலிலிருந்து விடுவிக்கும் இயக்கம், கருப்புப் பணத்திலிருந்து விடுதலை அளிக்கும் இயக்கம், மக்களுக்கு இடர்கள் பிரச்சனைகளிலிருந்து சுதந்திரம் அளிக்கும் இயக்கம் – இவற்றுக்கு நீங்கள் தலைமை தாங்க வேண்டும்.

ஒரு முறை மக்களுக்கு Rupay அட்டையின் பயன் எப்படி இருக்கிறது என்பதை நீஙக்ள் கற்றுக் கொடுத்து விட்டால், ஏழை உங்களுக்கு ஆசிகள் அளிப்பார். சாதாரண குடிமகனுக்கு நீங்கள் இந்த வழிமுறைகளைக் கற்றுக் கொடுத்து விட்டீர்கள் என்றால், அனைத்துக் கவலைகளிலிருந்தும் விடுதலை பெற்று விடலாம் இந்தப் பணியில் இந்துஸ்தானத்தின் அனைத்து இளைஞர்களும் ஈடுபட்டார்களேயானால், இதை செய்து முடிக்க அதிக காலம் பிடிக்காது என்பது எனக்குத் தெரியும். ஒரே மாதத்திற்குள்ளாக, நம்மால் ஒரு புதிய ஹிந்துஸ்தானமாக நிமிர்ந்து நிற்கச் செய்ய முடியும், இந்தப் பணியை நீங்கள் உங்கள் மொபைல் ஃபோன் மூலமாக உங்களால் செய்ய முடியும்; தினமும் பத்து வீடுகளுக்குச் செல்லுங்கள், தினமும் 10 வீடுகளை இதில் இணையுங்கள். நான் உங்களுக்கு அழைப்பு விடுக்கிறேன், வாருங்கள், உங்கள் ஆதரவு மட்டும் போதாது, நாம் இந்த மாற்றத்தை ஏற்படுத்தும் களவீரர்களாக மாறுவோம், மாற்றத்தை ஏற்படுத்தியே தீருவோம். தேசத்துக்கு கருப்புப் பணம், ஊழல் ஆகியவற்றிலிருந்து விடுதலை அளிக்கும் இந்தப் போரில் நாம் முன்னேறுவோம். இளைஞர்கள் நாட்டின் போக்கையே மாற்றியமைத்த நாடுகள் உலகிலே உண்டு; அதே போல யார் மாற்றத்தைக் கொண்டு வருகிறாரோ, அவர் இளைஞராகவே இருப்பார், யார் புரட்சியைஏற்படுத்துகிறாரோ அவர் இளைஞராகத் தான் இருப்பார் என்பதை நாம் ஏற்றுக் கொண்டே ஆக வேண்டும். கீன்யா சவாலை ஏற்றுக் கொண்ட வகையில், M-PESA என்ற ஒரு மொபைல் அமைப்பினை புகுத்தியது, தொழில்நுட்பப் பயன்பாட்டினை ஏற்படுத்தியது, M-PESA என்ற பெயரிட்டது. இன்று கிட்டத்தட்ட ஆப்பிரிக்காவின் இந்தப் பகுதியில் கீன்யாவின் அனைத்துப் பரிவர்த்தனைகளும் இதன் மூலம் நடைபெறக் கூடிய அளவுக்கு தயாராகி விட்டது. இந்த நாடு ஒரு மிகப் பெரிய புரட்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
என் நெஞ்சம் நிறைந்த இளைஞர்களே, நான் மீண்டும் ஒரு முறை, மீண்டும் ஒரு முறை உங்களிடம் வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன், நீங்கள் இந்த இயக்கத்தை முன்னெடுத்துச் செல்லுங்கள். ஒவ்வொரு பள்ளியும், கல்லூரியும், பல்கலைக்கழகமும், தேசிய மாணவர் படை, நாட்டு நலப்பணித் திட்டம் ஆகியன சமுதாய அளவில், தனிப்பட்ட முறையில் என இந்தப் பணியில் ஈடுபட உங்கள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கிறேன். நாம் இந்தப் பணியை முன்னெடுத்துச் செல்வோம். நாட்டுக்கு மிக உன்னதமான சேவை செய்ய நமக்கெல்லாம் ஒரு வாய்ப்பு கிட்டியிருக்கிறது, இந்த நல்வாய்ப்பை, பொன்னான வாய்ப்பை நழுவ விடக் கூடாது.
என் இனிய சகோதர சகோதரிகளே, நாட்டின் ஒரு மகத்தான கவிஞர், ஹரிவன்ஷ்ராய் பச்சன் அவர்களின் பிறந்த நாள் இன்று. ஹரிவன்ஷ்ராய் அவர்களின் பிறந்த நாளான இன்று, அமிதாப் பச்சன் அவர்கள் தூய்மை இயக்கத்துக்கான ஒரு கோஷத்தை அளித்திருக்கிறார். இந்த நூற்றாண்டின் அதிகம் விரும்பப்படும் கலைஞரான அமிதாப் அவர்கள், தூய்மை இயக்கத்தை மிகுந்த முனைப்போடு முன்னெடுத்துச் செல்வதை நீங்கள் கவனித்திருக்கலாம். அவரது நாடி நரம்புகளிலெல்லாம் தூய்மை தொடர்பான விஷயம் பரவி விட்டது போலத் தோன்றுகிறது; இதனால் தான் தனது தந்தையாரின்
பிறந்த நாளன்று கூட, அவருக்கு தூய்மை பற்றிய நினைவு எழுகிறது. ஹரிவன்ஷ்ராய் அவர்களின் ஒரு கவிதையின் சரணங்களைத் தான் எழுதுவதாய் அவர் கூறுகிறார் – மக்கி மறையும் உடல், மயக்கத்தில் ஆழும் மனம், கணநேர வாழ்க்கை, இதுவே என் அடையாளம். ஹரிவன்ஷ்ராய் அவர்கள் இந்த வரியின் வாயிலாகத் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டார். மக்கி மறையும் உடல், மயக்கத்தில் ஆழும் மனம், கணநேர வாழ்க்கை, இதுவே என் அடையாளம், என்பதை அடியொற்றி அவரது அருமந்த மகனான அமிதாப் அவர்கள், தூய்மையான உடல், தூய்மையான மனம், தூய்மையான பாரதம், இதுவே என் அடையாளம் என்று எழுதுகிறார். நான் ஹரிவன்ஷ்ராய் அவர்களுக்கு என் மரியாதை கலந்த வணக்கங்களைக் காணிக்கையாக்குகிறேன். அமிதாப் அவர்கள் இது போல மனதின் குரலில் இணைவதற்கும், தூய்மைப் பணியை முன்னெடுத்து வழிநடத்திச் செல்வதற்கும் நான் என் நன்றிகளை சமர்ப்பிக்கிறேன்.
என் உளம் நிறைந்த நாட்டுமக்களே, இப்போது மனதின் குரல் வாயிலாக உங்கள் எண்ணங்கள், உங்கள் உணர்வுகள் ஆகியன, உங்கள் கடிதங்கள் வாயிலாகவும், myGovஇலும், narendramodiappஇலும் தொடர்ந்து என்னை உங்களோடு இணைத்து வைக்கிறது. இப்போது 11 மணிக்கு மன் கீ பாத் (மனதின் குரல்) ஒலிபரப்பாகும், ஆனால் மாநில மொழிகளில், இது நிறைவடைந்த உடனேயே தொடங்கி விடும். அகில இந்திய வானொலியைச் சேர்ந்தவர்கள் இந்த முனைப்பை மேற்கொண்டிருப்பதற்கு நான் அவர்களுக்குக் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்; எங்கெல்லாம் இந்தி மொழி புழக்கத்தில் இல்லையோ, அங்கே இருக்கும் என் நாட்டு மக்களுக்கும் இதோடு இணைந்து கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும். உங்கள் அனைவருக்கும் மிக்க நன்றி.

இவ்வாறு பேசினார் பிரதமர் மோடி.