திங்கள், 11 ஜூன், 2018

கல்வித்துறையில் தமிழகம் சிறப்பான வளர்ச்சியை பெற்றிருக்கிறது -கவர்னர் பன்வாரிலால் புரோகித்

செயின்ட் ஜான்ஸ் பள்ளி குழுமங்களின் பொன்விழா ஆண்டு கொண்டாட்டம் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் நேற்று நடந்தது. விழாவுக்கு செயின்ட் ஜான்ஸ் பள்ளி குழுமங்களின் தலைவர் கிஷோர்குமார் தலைமை தாங்கினார். மந்தைவெளி செயின்ட் ஜான்ஸ் மெட்ரிகுலேசன் பள்ளியின் தாளாளர் சுரேஷ்குமார், வில்லிவாக்கம் செயின்ட் ஜான்ஸ் மெட்ரிகுலேசன் பள்ளியின் தாளாளர் ரமேஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு விருந்தினராக தமிழக கவர்னர் பன்வாரிலால் பங்கேற்றார். சிறப்பு அழைப்பாளர்களாக வி.ஐ.டி. பல்கலைக்கழக வேந்தர் ஜி.விஸ்வநாதன், தமிழ்நாடு இசை பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தரும், செயின்ட் ஜான்ஸ் பள்ளி முன்னாள் மாணவியுமான வீணை காயத்ரி, ஜி.எம்.ஆர். குழும கம்பெனிகளின் இயக்குனர் ஜி.பி.எஸ்.ராஜூ ஆகியோர் பங்கேற்றனர். செயின்ட் ஜான்ஸ் பள்ளிகளின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகித்த ஆசிரியர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. விருதினை பன்வாரிலால் புரோகித் வழங்கி கவுரவித்தார்.


முன்னதாக பன்வாரிலால் புரோகித் பேசியதாவது:-

சுவாமி விவேகானந்தர் கூறியபடி செயின்ட் ஜான்ஸ் கல்வி அறக்கட்டளை கல்வியை மேம்படுத்த தங்களை அர்ப்பணித்து முக்கிய பங்களிப்பு அளித்து வருகிறது. நான் கவர்னராக பொறுப்பு ஏற்று 8 மாதங்கள் ஆகின்றன. இதுவரையிலும் 17 மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ளேன். கல்வித்துறையில் நமது மாநிலம் பெற்றுள்ள வளர்ச்சி சிறப்பாக இருக்கிறது. பள்ளிக்கு செல்லாமல் இடையில் நிற்பவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு.

30 முதல் 40 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் வீதம் இருக்கிறார்கள். சுமார் 45 சதவீத மாணவர்கள் பள்ளி கல்வியை முடித்துவிட்டு மேல் படிப்புகளுக்கு செல்கிறார்கள். மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு இங்கு ஏராளமான மருத்துவ கல்லூரிகள் மற்றும் என்ஜினீயரிங் கல்லூரிகள் உள்ளன. நாடு சுதந்திரம் பெற்றதில் இருந்தே, தமிழக அரசு கல்வித்துறையை துடிப்புடன் மேம்படுத்திவருகிறது. அரசு உதவி பெறும் பள்ளிகளை ஊக்குவிப்பதிலும் தமிழகம் முன்னோடியாக திகழ்கிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

சமூக வலைத்தள மோசடியில் ஏமாறாமல் தப்பிப்பது எப்படி?

* மின்னஞ்சல்(இ-மெயில்) மூலம் பெறப்படும் வேலைவாய்ப்பில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். நேர்காணல் முடியும் முன்பு பணத்தை செலுத்தக்கூடாது. வேலைவாய்ப்பு உண்மையானதா? என்று அசல் நிறுவனத்தின் இணையதளத்தின் மூலம் சரிபார்க்க வேண்டும்.

* குலுக்கல் பரிசு சீட்டு ‘இ-மெயில்’, ‘எஸ்.எம்.எஸ்.’ வந்தால் அதனை நம்பக்கூடாது. பிளஸ் என்ற குறியீட்டுடன் ஆரம்பிக்கும் சில எண்களில் இருந்துவரும் அழைப்புகள் மூலமே அதிகளவில் மோசடிகள் நடக்கின்றன. +92, +90, +09 அல்லது +344 போன்ற தொடர்பு குறியீட்டு எண்களில் இருந்து அழைப்பு வந்தால் நிராகரிக்க வேண்டும். திரும்ப அழைக்கவும் கூடாது.

* இணையதளம் மூலம் பணப்பரிவர்த்தனை செய்யும்போது பிற செயலிகளை உபயோகப்படுத்தக் கூடாது. பொருட்களை பெற்ற பின் பணம் செலுத்தும் முறையே இணையத்தள வழியில் பொருட்கள் வாங்குவோருக்கு சிறந்தது.


* குறைந்த வட்டி விகிதத்தில் கடன் தருகிறோம் என்று அழைப்பு வந்தால் அதனை நம்பக்கூடாது.

* கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளை விற்பனை கூடங்கள் மற்றும் உணவகங்களில் பயன்படுத்தும்போது கவனமாக இருக்க வேண்டும்.

* பேஸ்-புக், டுவிட்டர் போன்ற சமூக வலைத்தலங்களில் சொந்த விவரங்களை பதிவு செய்யக்கூடாது. அறிமுகம் இல்லாத நபர்களை இணையத்தள நண்பர்களாக ஏற்றுக்கொள்ளக் கூடாது.

மாற்றுத்திறனாளி ஊழியர்களுக்கு சலுகை -தமிழக அரசு

அரசு துறைகளில் பணியாற்றும் மாற்றுத்திறனாளிகள் மாலை 5.45 மணிக்கு அலுவலகம் முடிந்து வீட்டுக்கு திரும்பும் போது போக்குவரத்து மற்றும் கூட்ட நெரிசலில் பேருந்தில் பயணம் செய்து வீட்டுக்கு செல்ல சிரமமாக உள்ளது. எனவே மாலையில் முன்னதாக அலுவலகம் விட்டு வீடு செல்ல அனுமதி வழங்குமாறு அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தனர்.

இதுதொடர்பாக பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்த துறை தலைமைச் செயலாளர் எல்.கே.திரிபாதி வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:-

மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கை தொடர்பாக மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆணையரிடம் குறிப்புரை கேட்ட போது, பார்வையற்றோர் மற்றும் மாற்றுத்திறனாளி பணியாளர்கள் தினமும் மாலையில் 15 நிமிடங்கள் முன்னதாகச் வீட்டுக்கு செல்ல அனுமதி வழங்கலாம் என பரிந்துரை செய்தார்.

மாற்றுத்திறனாளிகளுக் கான ஆணையரின் கருத்துருவை அரசு பரிசீலனை செய்தது. அதன் அடிப்படையில் பார்வையற்றோர் மற்றும் மாற்றுத்திறனாளி அரசுப் பணியாளர்கள் தினமும் மாலையில் 15 நிமிடங்கள் முன்னதாக அலுவலகத்தை விட்டு செல்ல அனுமதி அளித்து ஆணையிடப்பட்டுள்ளது.

இந்த சலுகை குறித்து தலைமைச் செயலக அலுவலக நடைமுறை மற்றும் அரசு அலுவலக நடைமுறை நூல்களுக்கு தக்க திருத்தம் பின்னர் வெளியிடப்படும். இதுதொடர்பாக உத்தரவு நகல்கள் தலைமைச் செயலகத்தின் அனைத்து துறைச் செயலாளர்கள், துறை தலைவர்கள், அனைத்து மாவட்ட கலெக்டர்கள், மாவட்ட நீதிபதிகள், ஐகோர்ட்டு பதிவாளர், ஊனமுற்றோருக்கான மாநில ஆணையர், சமூக நலம் மற்றும் சத்துணவுத்துறை செயலாளர், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் செயலாளர் உள்ளிட்ட அனைத்து துறைகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

ஒன்றரை ஆண்டுக்கு பிறகு வர்தா புயலுக்காக சம்பளம் பிடிப்பு: அதிர்ச்சியில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள்

வர்தா புயலுக்காக அரசு ஊழியர்களின் ஒரு நாள் சம்பள பிடித்தம் செய்ய கோரிக்கைமனு தற்போது ஏற்கப்பட்டது, ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
வர்தா புயலின் போது அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் ஒரு நாள் ஊதியத்தை பிடித்தம் செய்ய கோரி, கோரிக்கை மனுவை கடந்த 2016 ஆம் ஆண்டு அளித்த நிலையில் , அந்த சமயத்தில் மனுவை நிராகரித்த சூழலில்ஒன்றரை ஆண்டுக்கு பிறகு தற்போது அந்த மனு ஏற்றுக்கொள்ளப்பட்டு உள்ளதாக வருவாய் துறை சார்பில்பதில் அளிக்கப்பட்டு உள்ளதால் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த 2016 ஆம் ஆண்டு வர்தா புயல் பாதிப்பின் போது, தமிழக அரசுக்கு அதிகளவில் இழப்பு ஏற்பட்டு உள்ளதன் காரணமாக , அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் ஒருநாள் சம்பளத்தை பிடித்தம் செய்யக் கோரி கடந்த டிசம்பர் மாதம் 2016 ஆம் ஆண்டு தமிழ்நாடு கலை ஆசிரியர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் ராஜ்குமார் என்பவர்  கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்து இருந்தார்.

தமிழகம் முழுவதும் உள்ள ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களின் சம்பளத் தொகையை அந்தந்த மாவட்ட கருவூலங்கள் மூலமாக பிடித்தம் செய்யவேண்டும் என அந்த மனுவில் குறிப்பிட்டு இருந்தார்.அந்த மனு நிராகரிக்கப்படுவதாக அப்போது தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் ஒன்றரை ஆண்டுகள் நிறைவடைந்த சூழலில், தற்போது அந்த மனுவை ஏற்பதாக வருவாய் துறையினர் தெரிவித்து  ராஜ்குமாருக்கு பதில் அளித்து உள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

வர்தா புயல் பாதிப்புகள் அனைத்தும் முடிவடைந்து , நிதிகள் அனைத்து ஒதுக்கி நடவடிக்கைகள் முடிவடைந்த நிலையில் தற்போது அந்த மனு
ஏற்றுக்கொள்ளப்பட்டு இருப்பதால் , சம்பளம் பிடித்தம் செய்வார்கள் என்ற அச்சத்தில் ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் உள்ளதாகவும் எனவே உடனடியாக இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபட கூடாது என அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் கோரிக்கை வைத்து உள்ளனர்.

ஞாயிறு, 10 ஜூன், 2018

EMIS-தமிழ்நாடு தொடக்கக்கல்வி இயக்குநர் அவர்களின் செயல்முறைகள்

தமிழ்நாடு தொடக்கக்கல்வி இயக்குநர் அவர்களின் செயல்முறைகள்


கல்வித் தகவல் மேலாண்மை முறை (EMIS) இணையதளத்தில் 2018-19 ஆம் கல்வியாண்டில் தொடக்கக்கல்வி இயக்கக நிர்வாகத்தின் கீழ் செயல்படும் பள்ளிகளில் பயிலும் மாணவர் விவரங்களை வகுப்புவாரியாக வருகைப் பதிவேட்டில் உள்ளபடி EMIS இணையதளத்தில் பதிவு செய்யப்படுவதற்கு தேவையான நடவடிக்கைகளை கீழ்காணும் அறிவுரைகளைப் பின்பற்றி செயல்படுத்திட கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

கடந்த 2017-18 ஆம் கல்வியாண்டில் பயின்ற அனைத்து மாணவர்களின் விவரங்களும் தற்போது பயிலும் மேல்வகுப்பிற்கு EMIS குழுவால் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அவ்விவரங்கள் அனைத்து பள்ளிகளுக்கும் சரியாக செயல்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்திடல் வேண்டும்.

2018-19 ஆம் கல்வியாண்டில் முதல் வகுப்பில் புதியதாக சேர்க்கை ஆன மாணவர் சார்ந்த அனைத்து விவரங்களையும் 20.06.2018 ம் தேதிக்குள் உள்ளீடு செய்து முடித்திடல் வேண்டும்.

2017-18 ஆம் கல்வியாண்டில் ஏற்கனவே உள்ளீடு செய்யப்பட்டுள்ள மாணவர்களின் விவரங்களில் (தற்போதைய 2 ம் வகுப்பு முதல் 8 ம் வகுப்பு முடிய) ஏதேனும் தகவல் விடுபட்டிருப்பின் அவற்றை சரிசெய்வதற்கான Updating option வழங்கப்பட்டுள்ளது. அத்தகைய விடுபட்ட விபரங்களை இவ்வாய்ப்பினைக்கொண்டு சரிசெய்திடல் வேண்டும்.

2017-18 ஆம் கல்வியாண்டில் ஏற்கனவே உள்ளீடு செய்யப்பட்டுள்ள பள்ளிகளில் பயின்ற மாணவர்களில் எவரேனும் மாற்றுச்சான்றிதழ் பெற்று வேறு பள்ளிக்கு செல்லும் நிகழ்வில் அம்மாணவர் சார்ந்த விவரங்களை common pool க்கு Transfer செய்திடல் வேண்டும். மேலும் பள்ளியில் பயிலாத மாணவர் விபரங்களையும் common pool க்கு Transfer செய்திடல் வேண்டும்.

EMIS எண்ணுடன் மாற்றுச்சான்றிதழ் பெற்று புதியதாக வேறு பள்ளிக்கு சேர்க்கை ஆகும் மாணவர் விவரங்களை common pool ல் இருந்து எடுத்து சார்ந்த பள்ளிகளில் சார்ந்த வகுப்புகளில் சார்ந்த தலைமை ஆசிரியர்களால் பதிவுகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

இந்நிகழ்வின் போது 2 முதல் 8 வகுப்புகளில் புதியதாக சேர்ந்த மாணவர் விபரங்களை common pool ல் இருந்து எடுக்க முடியாத நிலையில் மட்டும் அத்தகைய மாணவர் விபரங்களை சார்ந்த வகுப்புகளில் சார்ந்த பள்ளி தலைமை ஆசிரியர்களால் புதிதாக பதிவு செய்திடல் வேண்டும்.

5 மற்றும் 8 ம் வகுப்புகளைத் தவிர பிற வகுப்புகளில் மாற்றுச்சான்றிதழ் வாங்கிய மாணவரின் விவரங்களை common pool க்கு Transfer செய்திடல் வேண்டும்.

நடப்பு கல்வியாண்டில் தினந்தோறும் நடைபெறும் சேர்க்கை/ நீக்கல் சார்ந்த விபரங்களை EMIS இணையதளத்தில் சார்ந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களால் உடனுக்குடன் பதிவுகள் செய்து முடித்திடல் வேண்டும்.

2018-19 ஆம் கல்வியாண்டில் EMIS இணையதளத்தில் அனைத்து வகுப்பு மாணவர் சார்ந்த அனைத்து விபரங்களையும் பதிவு செய்யும் பணியை 31.07.2018 ஆம் தேதிக்குள் முடித்திடல் வேண்டும்.

எனவே சார்ந்த கல்வி மாவட்டம் வாரியாக மாவட்ட கல்வி அலுவலர்கள், வட்டார கல்வி அலுவலர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கு உரிய அறிவுரைகள் வழங்கி இப்பணியை எவ்வித குறைகளுகு இடமின்றி காலதாமதம் ஏற்படாமல் முடிக்குமாறு அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கும் தமிழ்நாடு தொடக்கக்கல்வி இயக்குநர் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.


DEE - EMIS இணைய தளத்தில் அனைத்து வகை பள்ளி மாணவர்களைப் பதிவுசெய்தல் தொடக்கக்கல்வி இயக்குநர் செயல்முறைகள்!!